இந்திய தலைநகர் டெல்லியில், மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, தற்போது ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசும் காவல் துறையும் முனைப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் உரக்க ஒலிக்கத் துவங்கியிருக்கின்றன.
டெல்லியிலும் பல்வேறு நகரங்களிலும், கல்லூரி மாணவர்கள், மகளிர் அமைப்பினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.
செவ்வாய்க்கிழமையன்று, நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்னை, உறுப்பினர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தலைநகர் டெல்லியில் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்த உறுப்பினர்கள், அதுபோன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
இதுபற்றி மாநிலங்களவையில் அறிக்கை தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்த அதிக அளவிலான காவல்துறை ரோந்துப் பணிகள் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பணியில் தவறும் போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
”டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்க, உள்துறைச் செயலர் தலைமையில் சிறப்பு செயலாக்கக் குழு ஒன்று அமைக்கப்படும். தற்போது அவையில் பல உறுப்பினர்கள் சிறப்பான யோசனைகளை முன்வைத்திருக்கிறார்கள். அந்த யோசனைகளையும் உள்ளடக்கிய திட்டம் வகுக்கப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டுவரப்படும். அதேபோல், ஏற்கெனவே கடந்த 4-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கிரிமினல் சட்டத் திருத்தத்தில், பாலியல் வல்லுறவுக்கு எதிரான குற்றங்களுக்கும் தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன’’, என்றார் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே.