டில்லியில் மாணவர் புரட்சி : ஆவேசப் போராட்டத்தால் திணறும் இந்திய அரசு

delhi_protestடில்லியில் ஓடும் பஸ்சில் வெறிக் கும்பலால் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டதை கண்டித்து, நேற்று இரண்டாவது நாளாக மாணவ, மாணவியர் நடத்திய போராட்டத்திலும், வன்முறை வெடித்தது. போலீசாரின் தடை உத்தரவை மீறி, ஜனாதிபதி மாளிகை நோக்கி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். போலீஸ் வாகனங்களும், காங்கிரஸ் எம்.பி.,யின் காரையும், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அடித்து நொறுக்கினர்.

இந்த விவகாரத்தில், திருப்பு முனையாக, பா.ஜ., மற்றும் ஏழை மக்கள் கட்சியை சேர்ந்தவர்களும், நேற்றைய போராட்டத்தில் பங்கேற்றதால், மாணவர்களின் போராட்டம், அரசியல்வாதிகளின் கைகளுக்கு சென்று விட்டதாக, புகார் எழுந்துள்ளது.மாணவர்களின் இந்தப் போராட்டம், நேற்று தீவிரமடைந்தது.

ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள, ரைசினா ஹில்ஸ், காங்., தலைவர் சோனியாவின் வீடு அமைந்துள்ள, ஜன்பத் ஆகிய பகுதிகளில், ஏராளமான மாணவர்கள் திரண்டனர். இவர்களை, போலீசார், அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, டில்லியின் முக்கிய பகுதிகளில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. விஜய் சவுக், இந்தியா கேட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், சாலைகளில் தடுப்புகளை வைத்தனர். வாகனங்களை, வேறு பகுதிகள் வழியாக திருப்பி விட்டனர்.

நேரம், செல்ல செல்ல, மாணவர்களின்கூட்டம் அதிகரித்தது. நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஆயிரக்கணக்கான மாணவர்கள், வாகனங்கள் மூலம் ஜனாதிபதி மாளிகை மற்றும் முக்கிய அரசுத் துறை அலுவலகங்கள் உள்ள, ரைசினா ஹில்ஸ் பகுதி நோக்கி, அலை அலையாக வந்தபடி இருந்தனர்.

“நீதி வேண்டும்” என்ற கோஷத்தை எழுப்பியபடி, மாணவர்கள், போலீசாரின் தடையை மீறி, ஊர்வலமாக செல்ல முயற்சித்தனர். துவக்கத்தில், சில மாணவர்களை, வாகனங்களில் ஏற்றி, புறநகர் பகுதியில் விட்ட போலீசார், அதிக அளவில் மாணவர்கள் வந்ததால், செய்வதறியாது திகைத்தனர். சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்தபடி, முன்னேறிச் சென்றனர்.

delhi_protest02இந்நிலையில் போராட்டக்காரர்கள், போலீசார் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். நிலைமை மோசமாவதை அறிந்த போலீசார், தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், மாணவர்களை கலைக்க முயற்சித்தனர்.

இதனிடையே, அந்த வழியாக வந்த, டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் மகனும், டில்லி கிழக்கு தொகுதி எம்.பி.,யுமான, சந்தீப் தீட்ஷித்தின் காரை, அடித்து நொறுக்கினர்.

நேற்றைய போராட்டத்தில் திடீர் திருப்பமாக, பா.ஜ., வின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்களும், அரவிந்த் கெஜ்ரிவாலின், ஏழை மக்கள் கட்சியை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

set-fire-barricades-protestவெறிக் கும்பலால், கற்பழிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவிக்கு, டில்லி, சப்தர்ஜங் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியின் உடல் நிலை குறித்து, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பாதிக்கப்பட்ட மாணவியின் உடல் நிலை தொடர்ந்து மோசமாகவே உள்ளது. மாணவி விரைவில் குணமடைவதற்கான அனைத்து சிகிச்சைகளும் உடனுக்குடன் அளிக்கப்பட்டு வருகின்றன. உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மன ரீதியாகவும் மாணவி கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளார். அவருக்கு தொற்று எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக நோய் எதிர்ப்பு தி மருந்துகள் அதிகம் செலுத்தப்பட்டுள்ளன. உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட, மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை, காங்கிரஸ் தலைவர் சோனியாவும், காங்., பொதுச் செயலர் ராகுலும், தங்களின் இல்லத்தில், நேற்று சந்தித்து பேசினர். 90 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் இந்திய மத்திய உள்துறை இணை அமைச்சர், ஆர்.பி.என். சிங், காங்., செய்தி தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்பின், அமைச்சர், ஆர்.பி.என்.சிங் கூறியதாவது: ஏழு பேர் அடங்கிய மாணவர் குழுவுடன், சோனியாவும், ராகுலும் பேச்சு நடத்தினர். எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும், இந்த வழக்கின் விசாரணையை விரைவு படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும் மாணவ பிரதிநிதிகளிடம் சோனியாவும் ராகுலும், எடுத்துக் கூறினர். அமைதி காக்க வேண்டும் என்றும், கோபத்தை வெளிப்படுத்துவது எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது என்றும் மாணவர்களிடம் வலியறுத்தினர். எதிர்காலத்தில், இதுபோன்ற குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாணவர்களிடம் சோனியா உறுதி அளித்தார். இவ்வாறு ஆர்.பி.என்.சிங் கூறினார்.

TAGS: