பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை: மன்மோகன் வாக்குறுதி

manmohanஇந்தியாவில் பெரும் பரபரப்பை உருவாகிக்கியுள்ள பாலியல் வல்லுறவுச் சம்பவம் தொடர்பில் அதிகரித்துவரும் மக்களின் ஆத்திரத்தையும் கொந்தளிப்பையும் ஆற்றுப்படுத்தும் முயற்சியாய் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.

ஓடும் பேருந்தில் 23 வயது மருத்துவ மாணவி ஒருவர் பலரால் ஒரேநேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட சம்பவத்தை ஒரு கொடூர செயல் என பிரதமர் வர்ணித்துள்ளார்.

நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சாத்தியமாகக்கூடிய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஆகவே மக்கள் பொறுமையும் அமைதியும் காக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த பாலியல் வல்லுறவைச் செய்தவர்கள் எதிராக கடுமையான நடவடிக்கை தேவை எனக் கோரி கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்துவரும் பெரும் ஆர்ப்பாட்டங்களில் மக்களுக்கும் போலிசாருக்கும் இடையே மோதல்கள் வெடித்திருந்த சூழ்நிலையில் தில்லியிலுள்ள அரசு கட்டிடங்கள் அனைத்திலும் போலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த இரண்டு நாட்களில் தில்லியில் இச்சம்பவம் தொடர்பில் நடந்த பல்வேறு ஆர்ப்பாட்டங்களின்போது ஏற்பட்டிருந்த வன்முறையில் போலிசார் உட்பட நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்தனர்.

இதனிடையே பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் உடல் நிலை தொடர்ந்தும் மோசமாகவே இருந்துவருகிறது. சுவாசக் கருவி பொருத்தப்பட்ட நிலையிலேயே அவர் மருத்துவமனையில் இருந்து வருகிறார்.

TAGS: