பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம் : ஜெயலலிதா ஆலோசனை

Jayalalithaa2பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுபவோரை வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் (chemical castration) செய்யலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.

மேலும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வழி செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படவேண்டுமெனவும் கூறியிருக்கிறார்.

பாலியல் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களை 30 நாட்கள் வரை காவலில் வைக்கவும், அவர்கள் முன் ஜாமீன் பெறாமல் இருக்கவும், கைது செய்யப்படுவோர் வழக்கு விசாரணை முடியும் வரை பிணையில் விடுவிக்கப்படாமல் இருக்கவும் சட்டத்திருத்தங்கள் வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

தமிழகத்தில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் மருத்துவச் சிகிச்சைக்கான மொத்தச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்வதுடன், அவர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான உதவிகளையும் அரசே செய்யும் என்றும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் புதுடில்லி சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தனது வேதனையைத் தெரிவித்திருக்கும் அவர், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் குறைவாகவே இருந்தாலும், அறவே அவற்றைக் களைவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிறார்.

TAGS: