கிராம மக்கள் முன்னிலையில் போலீஸ்காரரை சுட்டுக் கொன்ற நக்சலைட்டுகள்

Naxalitesஆந்திர மாநிலம் நல்ல மலை காட்டுப்பகுதி மற்றும் ஒரிசா எல்லைப் பகுதிகளில் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவர்களை கூண்டோடு அழிக்க அதிரடிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் போலீஸ் துறை மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.

இந்நிலையில் கம்மம் மாவட்டம் பர்னகாலா கிராமத்தை சேர்ந்த போலீஸ் காரர் நீலம் நரேஷ் (வயது 28) அங்குள்ள மைதானம் ஒன்றில் கால்பந்து ஆடிக் கொண்டிருந்தார். இதனை அக்கிராம மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது 4 பேர் கொண்ட நக்சலைட்டுகள் அங்கு நவீன துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்தனர்.

அவர்கள் திடீரென நீலம் நரேஷ் மீது துப்பாக்கியால் சுட்டனர். தலையில் படுகாயம் அடைந்த அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியானார். இதைப் பார்த்ததும் சுற்றி நின்ற கிராம மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்ததும் வெங்கடாபுரம் போலீசார் விரைந்து வந்து நரேஷின் உடலை கைப்பற்றி கம்மம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய நக்சலைட்டுகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

TAGS: