மதுரை: தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த தயங்கும் நிலையில், மதுவை முற்றிலும் ஒதுக்கி முன் மாதிரியாக திகழ்கின்றனர் மதுரை சரந்தாங்கி கிராம மக்கள்.
இக்கிராமத்தில் 1,400 பேர் வசிக்கின்றனர். இம்மக்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை தவறாமைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றனர். ஆண்கள் மது அருந்துவது கிடையாது. இங்கு “டாஸ்மாக்’ கடையை திறக்க சிலர் முயன்றனர். கிராம மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பால் முடியவில்லை.
சரந்தாங்கி கிராம தலைவர் ஜெயக்கொடி: ஊர்கட்டுப்பாட்டை நாங்கள் மீறியது கிடையாது. கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையுடன் ஊர்க்காரியங்களை செய்கிறோம். கிராமத்தில் யாராவது இறந்தால், கிராம நிதியில் இருந்து 500 ரூபாய் வழங்கப்படுகிறது. ஏழை, பணக்காரர் என வித்தியாசம் இங்கில்லை. பூரண மதுவிலக்கு இங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை மீறி மது அருந்தி ஊருக்குள் வரக்கூடாது. இங்குள்ள தோட்டங்களுக்கு வேலி கிடையாது. திருடாமை, பொய்கூறாமை எங்களது கொள்கை.
மூக்கம்மாள், சரந்தாங்கி: மது விலக்கு கொள்கை அமலில் இருப்பதால், என் கணவருக்கு குடி பழக்கம் இல்லை. இக்கொள்கை இங்கு பின்பற்றப்படாமல் இருந்திருந்தால் பலர் குடி பழக்கத்திற்கு ஆளாகி குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும். எங்கள் ஊரில் யாருக்கும் இப்பழக்கம் இல்லாதது நாங்கள் செய்த புண்ணியம். சரந்தாங்கி கிராமத்தை முன்மாதிரியாக கொண்டு, குடியை கெடுக்கும் மது எனும் கொடூரனுக்கு சாவு மணி அடிக்க பிற கிராமங்களும் முன்வர வேண்டும்.