தமிழ்ப்பள்ளி என்பது ஒரு கழகம் (institution) இங்கிருந்துதான் தமிழ், தமிழர் சம்பந்தப்பட்ட அனைத்து சமாச்சாரங்களும் உருவாக்கப்பட்டு வியாபித்து ஆலமரமாய் உருவெடுக்கின்றன. தமிழன் இந்நாட்டின் ஓர் அங்கமாய் விளங்க, தொடர்ந்து ஒரு சமுதாயமாக இருக்க, அரசாங்கம் தமிழனை இந்நாட்டில் உள்ள மூவினங்களில் ஓரினமாய் அங்கீகரிக்க அதன் வழி அந்த இனத்திற்கு வேண்டிய சலுகைகளை தொடர்ந்து ஒதுக்கிட தமிழ்ப் பள்ளிகளின் நிலைத்தன்மை இந்த நாட்டில் அவசியமாகின்றது.
தமிழ்ப் பேசும் கூட்டம் இருந்தால்தான், தமிழன் என்ற ஒரு இனம் அடையாளம் காணப்படும்; அதற்குறிய அங்கீகாரமும் கிடைக்கும். தமிழ்ப் பேசும் மக்களை உருவாக்கும் தளம் தமிழ்ப்பள்ளிக்கூடங்கள். ஆகவே தமிழ்ப் பள்ளிகள் அழிந்தால், தமிழ்ப் பேசுபவர்கள் குறைவார்கள், தமிழின் பயன்பாடு குறையும், தமிழை அரசாங்கம் ஒரு தேவையானா மொழியாக கருதாமல் புறந்தள்ளும். அதானால், தமிழை எங்கெல்லாம் அரசாங்கம் இதுகாறும் பயன் படுத்தி வந்ததோ (உதாரணம்: வானொலி தொலைக்காட்சி, அரசு வெளியீடுகள்) அங்கெல்லாம் அதன் பயன்பாட்டை சிறுது சிறிதாக குறைத்து இறுதியில் அது முற்றிலுமாக நீக்கப்பட்டு விடும்.
தமிழ்ப்பள்ளியிலிருந்து விளையும் பயிற்கள் எங்கெல்லாம் ஊடுருவுகின்றன என்பதனைக் காண்போம் :
• தமிழ் ஆசிரியார்களாக உருவாகி தமிழ்ப்பள்ளிகளுக்கே உரமாகிறார்கள். இதனால் 9 ஆயிரம் தமிழ் ஆசிரியர்கள், 523 தலைமை ஆசிரியர்களின் வாழ்வாதாரமாக தமிழ்ப்பள்ளிகள் விளங்குகின்றன.
• தமிழ்ப்பாடம் இடைநிலப்பள்ளியில் தொடர்ந்து ஒரு பாடமாக இருக்க மாணவர்களை அனுப்பும் ஊட்டிகளாக (feeder) தமிழ்ப்பள்ளிகள் விளங்குகின்றன. பின்பு இம்மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டதாரியாவதற்கும் தமிழ்ப் பள்ளிகளே காரணமாக அமைகின்றன.
• தமிழை திறனாக படிப்பதாலும் பேசுவதாலும், தமிழ் சார்ந்த அமைப்புகளிலும், நிறுவனங்களிலும் வேலை செய்ய வாய்ப்புகளும் அதன் வழி வாழ்வாதாரமும் கிடைக்கின்றன. உதாரணம் : மின்னல் எப் எம், டிஎச்ஆர் ராகா வானொலி, அஸ்ட்ரோ வானவில்.
• தமிழ்ப் பத்திரிக்கை துறைக்கு, ஆசிரியர்கள், நிருபர்கள், பிழை திருத்துபவர்கள் இவர்களை உற்பத்தி செய்யும் முதல் கட்ட தொழிற்சாலை தமிழ்ப் பள்ளிகளாகும். தமிழ்ப் பள்ளிகள் இல்லயென்றால் இத்துறைதான் முதலில் காணாமல் போகும்.
நூல் எப்படி சிதரிய முத்துக்களை ஒன்றிணைத்து கோர்வையாய் ஒரு மாலையாய் உருவாக்குகின்றதோ அதே போல் தமிழ் என்னும் நூலானது, தமிழ்ச் சார்ந்த அனைத்திலும் ஊடுறுவி தமிழனை ஒரு இனமாய் ஒரு சமூகமாய் அடையாளங் காட்டுகிறது. தமிழ்ப்பள்ளிகள் இல்லையேல் தமிழனின் அடையாளங்கள் யாவும் கோர்க்கப்படாத காரணத்தினால் சிதறி, நாளடைவில் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
மாணவர் சரிவு
இந்த ஆண்டு தமிழ்ப் பள்ளிகளுக்கு செல்லும் ஒன்றாம் ஆண்டின் மாணவர்களின் என்ணிக்கை முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் சரிவைக் கண்டுள்ளது என்பதனை நாம் அறிவோம். தொடர்ந்து இந்த நிலைமை நீடிக்குமானால் தமிழ்ப் பள்ளிகள் இந்த நாட்டில் அதிக நாட்கள் நீடிக்க மாட்டா என்ற உண்மையும் நம்மை சுடுகின்றது. இது குறித்து தனி மனிதர்கள் வழியும் சமூக அமைப்புகள் வழியும் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கணிசமான இந்திய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஏன் தமிழ்பள்ளிகளுக்கு அனுப்புவதினின்றும் தவிர்க்கிறார்கள் என்பதற்கு பல காரணங்களுண்டு…
1. தேசிய பள்ளிகளில் கணிதமும், அறிவியலும் மலாய் மொழியில் பயிற்றுவிப்பதால் அவர்கள் இடைநிலைப் பள்ளிக்கு போகும் பொழுது அவ்விரு பாடங்களும் தொடர்ந்து மலாய் மொழியில் இருப்பதாலும் அது தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு சுலபமாக இருக்கும் என்ற எண்ணம்.
2. தமிழ்ப் பள்ளிகளில் பயில்வதனால் பொருளாதார பலன் இல்லை
3. தமிழரல்லாதவர்கள் பெரும்பாலும் வேற்று மொழி பள்ளிகளுக்கே தங்கள் பிள்ளைகளை அனுப்ப விரும்புகிறார்கள். குறிப்பாக வட இந்தியர்கள் மலையாளிகள் தெலுங்கர்கள் (தோட்டபுற மக்களைத் தவிர) ஆங்கிலம் போதனா மொழியாக இருந்த காலந்தொட்டே தமிழ்ப்பள்ளிகளை தவிர்த்து வந்துள்ளனர்.
4. சில பெற்றோர்களுக்கு இனப்பற்றும் மொழிப்பற்றும் குறைவாக இருப்பதனால்.
5. தமிழ்ப்பள்ளிகளின் தரத்தின் மீது பெற்றேர்களுக்கு நம்பிக்கை இன்மை.
இந்த மேற்கூறிய காரணங்களுக்காக எறக்குறைய 70 ஆயிரம் இந்திய மாணவர்கள் மற்ற மொழி பள்ளிகளில் பயிலும் நிலைமை உருவாகியுள்ளது. தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தற்பொழுது 1 லட்சமாக இருக்கிறது.
அறிவியலும் கணிதமும் மலாய் மொழியில் போதிப்பதனால் தமிழ்ப் பிள்ளைகள் மலாய் பள்ளிக்கு செல்கிறார்கள் என்ற கூற்றில் உண்மை இருந்தாலும், இதே பிரச்சனை சீன பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும் பொருந்தும் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அவ்வின மக்களில் 97 விடுக்காட்டினர் சீனப்பள்ளிக்களுக்குத்தான் அனுப்புகிறார்கள் என்று ஆய்வு கூறுகின்றது.
தமிழ்ப் பள்ளிகளில் தேசிய மொழியில் நல்ல தேர்ச்சி இருந்தால் அவர்கள் இடைநிலைப்பள்ளிகளில் இந்த இடையூறுகளை சுலபமாக எதிர்கொள்வார்கள் என்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மை. இதை ஒன்றையே முதற்காரணமாகக் கொண்டு தமிழ்ப் பிள்ளைகள் தமிழ்ப் பள்ளிகளுக்களுக்கு அனுப்பாதது மிகவும் தவறு. அதோடு, தமிழ் மொழி மலாய் மொழியைவிட கடினமான மொழி. நம் மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு மற்ற மொழிகள் சுலபமாக வரும். ஆகவே தமிழ்ப்பள்ளியிலிருந்து போகக் கூடியவர்கள் தமிழில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அவர்களால் எந்த மொழியிலும் எந்த பாடத்தையும் சுலபமாக படிக்கும் ஆற்றல் ஏற்படும்.
இந்த சிந்தனை மாற்றம் இந்தியப் பெற்றொர்களுக்கு ஏற்பட்டால் அதனால் குறந்தது 35 ஆயிரம் இந்திய மாணவர்களையாவது நாம் தமிழ்ப் பள்ளிகளின் பால் ஈர்க்கமுடியும் . அதனால் ஏறக்குறைய 3000 தமிழ் ஆசிரியர்கள் பணியிலமர்த்தப்படுவார்கள்.
தமிழ்ப்பள்ளிகளில் பயில்வதானால் பொருளாதார பயன்கள் எதுவும் இல்லை என்று கூறுவது அறியாமையால் வருவது என்பது என் கருத்து. தமிழ்ப்பள்ளியில் பயிலுவதோ வெறும் 6 ஆண்டுகள் மட்டுமே, அதுவும் எண் எழுத்து வாசித்தல் என்னும் அடிப்படை கல்வி மட்டுமே கற்று, உடல் முதிர்ச்சி, மனப்பக்குவம் அடையாத வயதில் எந்த விதமான பொருளாதர பயனையும் நாம் எதிர்பார்க்க முடியாது.
இது தமிழ்ப் பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தக்கூடியது அல்ல, ஒரு மாணவன் எந்த மொழிப்பள்ளியில் பயின்றாலும் ஆரம்ப கல்வியின் மூலம் அவனுடைய பொருளாதாரம் உயராது. இந்த அறியாமையால்தான் இந்தியப் பெற்றோர்களில் சிலர் தங்களின் பிள்ளகளை சீனப்பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். சீனமொழிப்படித்தால் எப்படியாவது நம் பிள்ளை முன்னுக்கு வந்துவிடுவான் என்று நம்புகின்ற பெற்றோரை இன்றும் காணலாம்.
என்னாதான் தீர்வு ?
1. 1950 களில் மலாயாப் பல்கலைகழகத்தில் இந்தியப் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட பொழுது , அங்கு பயிற்று மொழியாக சமஸ்கிருதத்தை கொணர வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. அப்பொழுது சிங்கப்பூரிலிருந்து வெளி வந்த தமிழ் முரசு பத்திரிகையின் ஆசிரியர் தமிழவேள் கோ சாரங்கபாணி அவர்களின் விடாமுயற்சியாலும், கடும் உழைப்பாலும், நடத்திய ஆர்பாட்டங்களாலும் அப்போதைய அரசாங்கம் தமிழ்ச் சமுதாயத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழை பயிற்று மொழியாக்கிற்று. அன்று தமிழ்வேள் கோ.சாரங்கபாணி அந்த முயற்சியை மேற்கொண்டிராவிட்டால் இன்று தமிழே மலாயாப் பல்கலைகழகத்தில் இல்லாமல் போய் தமிழ்ப் பட்டதாரிகளும் உருவாகாமலேயே போயிருப்பார்கள். அது எத்தனை பெரிய இழப்பாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள்.
எப்படி அண்ணன் கோ.சாரங்கபாணி 60 வருடங்களுக்கு முன்னால் தமிழுக்காக போராடினார்களோ அதே வழியில் நாம் சென்று போராட வேண்டும். மாநிலங்கள் தோறும், ஜில்லாக்கள் தோறும், தோட்டங்கள் தோறும், தமிழ் சார்ந்த இயக்கங்கள், தமிழர் இளைஞர் மணிமன்றங்கள், அரசியல் சார்புடைய இயக்கங்கள், அரசு சாரா இயக்கங்கள் ஒன்று சேர்ந்து அந்த அந்த இடத்திலுள்ள பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு தமிழ்ப் பள்ளிக்கூடங்களின் அவசியத்தை உணர்த்தி, அங்கு அவர்கள் பிள்ளைகளை அனுப்ப உத்தரவாதம் பெறவேண்டும்.
முதலில் அங்குள்ள பகுதிகளில் எத்தனை தமிழ்ப் குடும்பங்கள் இருக்கின்றன, அதில் எத்தனை பிள்ளைகள் அடுத்த வருடம் பாலர் பள்ளிக்கும், ஒன்றாம் வகுப்புக்கும் போகும் வயதுடையவர்கள் என்ற புள்ளி விவரங்களை துல்லியமாக எடுக்கவேண்டும். அதன் பின் அங்குள்ள தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் துணை கொண்டு ஒரு பொதுக்கூட்டமோ விருந்தோ வைத்து எல்லா பெற்றோர்களையும் அழைத்து அங்கேயே பதிவினை நடத்தவேண்டும்.
இதற்கு தலைமை ஆசிரியர்களும் ஒத்துழைப்பு நல்கவேண்டும். இந்த வேலையை அரசாங்கம்தான் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. தமிழ் மொழி என்பது தமிழர்களால் மட்டுமே கட்டிக்காக்கப்படவேண்டிய ஒரு சொத்து. அதனின் வாழ்வும் சாவும் தமிழர் கையில்தான் உள்ளது. இதுதான் நிதர்சனமான உண்மை, இதனை அனைத்து தமிழர்களும் முதலில் உணரவேண்டும். ஆகவே இந்தாட்டில் தமிழ் நிலைக்க வேண்டுமா இல்லையா என்பதனை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
2. தமிழ் பள்ளிக்கூடங்களை தேசிய பள்ளிகளுக்கு இணையாக தரத்தில் உயர்தப்படவேண்டும். தமிழர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை தமிழின் மேல் உள்ள பற்றால் மட்டும் அனுப்புகின்றார்கள் என்ற நிலை மாறி, தமிழ்ப் பள்ளிகளிலும் கற்றல் கற்பித்தல் சிறப்பாக உள்ளது ஆகவே என் பிள்ளையை தமிழ்ப் பள்ளிக்குத்தான் அனுப்புவேன் என்று ஒவ்வொரு பெற்றோரும் சொல்லும் காலம் வரவேண்டும். ! சீனப்பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோரின் மனம் மாற சரியான ஆயுதமும் இதுதான்.
3. தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு படிப்போடு ஓரளவு பண்பாடும் வளர வாய்ப்புள்ளது என்பதனை நம் பெற்றோர்கள் உணரவேண்டும். பல்லின மக்கள் படிக்கும் தேசிய பள்ளிகளில் இந்த பண்பாட்டுக் கல்வி போதனை குறைவாகவே கிடைக்கும். பெரும்பாலான நம் தமிழ் ஆசிரியார்களிடம் அற்பணிப்பு உணர்வும் , இன உணர்வும் இருப்பதனால் தமிழ் மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் ஒரு பாதுகாப்பான சூழ்நிலையில் கல்வி பயிலும் சூழல் உள்ளது.
4. தமிழ்ப் பள்ளிகளின் தரம் உயர மாணவர்களின் சேர்க்கையில் கலப்பு இருக்க வேண்டும், அதாவது கீழ்மட்ட மக்களும் நடுத்தர மக்களுமே பெரும்பாலும் சென்றுகொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு மேல் குடியைச் சேர்ந்த தமிழ்ப் பிள்ளகளும் அங்கு சென்று பயிலவேண்டும்.
டாக்டர்கள், எஞ்சீனியர்கள் வியாபரிகள் முதலாளிகள் இவர்களின் பிள்ளைகளும் அங்கு சென்று பயில்வார்களேயானால் , அங்கு ஒரு நல்ல மாணவர் கலப்பு உருவாகும். நல்ல சூழ்நிலயில் இருந்து வரும் பிள்ளகளுடன் , வசதி குறைந்த மாணவர்களும் சேர்ந்து படிப்பதால் , பின்னவர்களுக்கு முன்னவர்களின் நற்பண்புகளும் பழக்க வழக்கங்களும் பரவும் வாய்ப்பு உள்ளது. இதை துணிந்து இந்த வசதி படைத்தவர்கள் தமிழ்ப் பள்ளிகளின் வளர்சிக்காகவும் , தர உயர்வுக்காகவும் செய்ய வேண்டும்.
5. கணிதமும் அறிவியலும் ஆங்கிலத்தில் இருந்த பொழுது அதிகமான மேல் மேல்குடி மக்கள் அவர்களின் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பினார்கள் என்பது ஆய்வில் தெரிய வரும் உண்மை. மீண்டும் அந்த மொழி மாற்றம் ஏற்படுமேயானால் பழையபடி தமிழ் மாணவர் எண்ணிக்கை கூடுமென்பது திண்ணம். இதனை கல்வியாளர்களும் அரசியல் வாதிகளும், தமிழ்ப் பற்றாளர்களும் நன்கு சிந்திக்க வேண்டும்.
உணர்ச்சிவசப்படாமல், தமிழ் பள்ளிகளும் தமிழ் மாணவர்களும் மேலோங்க இந்த மொழி மாற்றம் அவசியமென்று நான் கருதுகிறேன். துன் மஹாதீர் செய்த உறுப்படியான சில காரியங்களில் இந்த கணித அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியில் பயிற்றுவிக்க ஆவணம் செய்ததும் ஒன்று. இவ்விரு பாடங்களும் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்ட பொழுது தமிழ் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி மற்ற மொழிப் பயன்ற மாணவர்களை விட சிறப்பாக இருந்தது என்பது ஆய்வில் தெரிந்த உண்மை.
இந்த முறை நமது மாணவர்களின் ஆங்கிலத் திறனை வளர்த்ததோடு மட்டுமில்லாமல், அவர்கள் இடைநிலைப்பள்ளிகளில் இந்த 2 பாடங்களில் நன்கு தேர்ச்சிபெற உதவியுள்ளது. தாய்மொழிப் பற்றாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்பதனை அறிந்துள்ளேன். இருந்தாலும் நடைமுறைக்கு ஏற்ப சிந்தித்தோமானால் இது ஒரு சிறந்த வழி என்று எனக்குப் படுகிறது.
தாய் மொழியில் கணிதம் அறிவியல் பாடங்களைக் கற்றால் அவை மாணவர்கள் மனதில் நன்கு பதியும் என்பது உண்மை என்ற போதிலும், இந்த பாடங்கள் தொடர்ந்து தாய்மொழியிலேயே இடைநிலை, மேல்நிலை பள்ளிகள் என்று பல்கலைக்கழகம் வரை தொடர்ந்து இருந்தால் மேலும் சிறப்பாக அமையும். ஆனால் மலேசியாவில் அப்படி செயல் படுத்த சாத்தியமில்லை. அப்படியிருக்கும் பொழுது 13 வயதில் வேற்று மொழியில் படித்துத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் பட்சத்தில் அதனை 9 வயதிலிருந்தே ஆங்கிலத்தில் பயின்றால் விளையும் நன்மைகளை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இதனால் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, தரம், வளர்ச்சி ஆகியவை உறுதிசெய்யப்படும். ஆகவே கணிதமும் அறிவியலும் மீண்டும் ஆங்கிலத்தில் கொண்டு வர முயற்சி செய்யப்பட வேண்டும்.
6. தமிழாசிரியர்களின் மனப்போக்கும் காலதிற்கேற்றார் போல் மாறவேண்டும். அதிகமான தலைமை ஆசிரியர்கள் தியாக உணர்வோடு தமிழ்ப்பள்ளிகளை நிர்வகித்து வந்தாலும் கூட, கணிசமான எண்ணிக்கையுடைய தலைமை ஆசிரியர்கள் இன்னமும் தலைமை ஆசிரியர் வேலையை மற்ற அரசாங்க வேலையைப் போன்றே எண்ணுகின்றார்கள்.
அவர்கள் தலைமையில் ஒரு சமுதாயத்தின் தலை எழுத்தை மாற்றக்கூடிய பொறுப்பு இருக்கின்றது என்பதனை அவர்கள் உணரவேண்டும். மாணவர்கள் சேர்க்கையில் அதிக ஈடுபாடு காட்டுதல், கற்றல் கற்பித்தல் தரத்தை உயர்த்த பாடுபடுதல், பள்ளி கட்டொழுங்கை மேம்படுத்துதல், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம் இவற்றுடன் சுமூக உறவு இவைகளெல்லாம் பள்ளியின் தரத்தை உயர்த்த வழி வகுக்கும்.
மலேசிய திருநாட்டில் தமிழ் நிலைத்தோங்க இவற்றை செய்வோமா தமிழர்களே !
நம் மொழி, நமது பள்ளி, நாம்தான் பொறுப்பு!
கோவிந்தசாமி அண்ணாமலை
தஞ்சோங் மாலிம்