சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் புதன்கிழமை முதல் வெளியாகலாம் எனக் கூறியுள்ளது .
நீதிபதி கே வெங்கட்ராமன் பலமணிநேர விசாரணைக்குப் பிறகு செவ்வாய் இரவு 10 மணி அளவில் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில், தமிழக அரசு சட்டம் ஒழுங்குப் பிரச்னையைக் காரணம் காட்டி குற்றவியல் சட்டம் பிரிவு 144-ன் கீழ் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு விதித்திருந்த இருவாரத் தடையாணையை நிறுத்திவைத்து உத்தரவிட்டார். ஆயினும் வழக்கு விசாரணை தொடருமென்றும் அவர் கூறியிருக்கிறார்.
விசாரணையின் போது தமிழக அரசின் வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், விஸ்வரூபம் திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், திரைப்பட தணிக்கைத்துறை சட்டப்படி சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
திரைப்பட தணிக்கையில் முறைகேடு என்ற தமிழக அரசின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு வழக்கறிஞர் வில்சன் மறுப்பு தெரிவித்தார்.
விஸ்வரூபம் படத்தை தணிக்கை செய்வதில் வாரிய உறுப்பினர்கள் சரியாக செயல்பட்டுள்ளனர். கடந்த அக்டோபரில் படத்தை பார்வையிட்டு ஆட்சேபகரமான 14 காட்சிகளை நீக்க உத்தரவிடப்பட்டது. 1.08 நிமிடம் ஓடக்கூடிய காட்சிகள் நீக்கப்பட்ட பின்பே தணிக்கை சான்று தரப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் வில்சன் வாதம் செய்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இரவு 10 மணிக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி தீர்ப்பு 10 மணிக்கு வழங்கப்பட்டது. விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்திருந்த தடையை உயர்நீதிமன்றம் நீக்கியது. தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் படத்தை தற்போது முதல் வெளியிடலாம் என்றும் கூறியுள்ளது.
எனினும், இந்த இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு சென்னை உயர்நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்யவுள்ளது.
இப்படம் தமது மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி இஸ்லாமிய அமைப்புக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, திரைப்படத்துக்கு இருவார காலத் தடையை தமிழக அரசு விதித்தது. இதை எதிர்த்து கமல்ஹாசன் நீதிமன்றம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இப்படம் இன்னும் வெளியாகாத சூழலில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன.
ஆயினும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வேறு பல நாடுகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.