விஸ்வரூபம் திரைப்படத்துக்கு எதிர்வரும் பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி வரை மீண்டும் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று புதன்கிழமை (30.01.2013) உத்தரவிட்டது.
சட்டம் ஒழுங்கு காரணங்களை சுட்டிக்காட்டி தமிழக அரசு இந்தப் படம் திரையிடப்படுவதற்கு விதித்த தடையை நீதிபதி வெங்கட்ராமன் நேற்று-செவ்வாய்கிழமை இரவு நீக்கினார். எனினும் வழக்கு தொடரும் எனவும் அவர் அறிவித்தார்.
ஆனால் இத்தீர்ப்பை எதிர்த்த தமிழக அரசு, தலைமை நீதிபதி எலிப்பி தர்மாராவிடம் இத்தீர்ப்புக்கு உடனடியாத தடை விதிக்க வேண்டும் எனக் கோரியது.
அதற்கு மறுப்புத் தெரிவித்த அவர், இன்று-புதன்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யுமாறு கூறினார்.
அந்த மனு நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் முன்னால் விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதி விதித்த தீர்ப்பை நிறுத்தி வைத்து அவர்கள் தீர்ப்பளித்தனர்.
இதன்மூலம் விஸ்வரூபம் படம் திரையிடப்படுவதற்கு தமிழக அரசு விதித்திருந்த தடை உத்தரவு மீண்டும் அமலுக்கு வருகிறது.
இதனிடையே நடிகர் கமல்ஹாஸன் விஸ்வரூபம் படத்திலிருந்து சில காட்சிகளையோ வசனங்களையோ நீக்கத் தயாராகவுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.