கமல் மீது ஜெயலலிதா கோபப்பட காரணங்களை அடுக்குகிறார் கருணாநிதி

karunanidhiசென்னை : இந்திய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில், கமல் பேசுகையில், “வேட்டி கட்டிய ஒரு தமிழன் பிரதமராக வர வேண்டும்” என, குறிப்பிட்டதுதான், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஒரு காரணமா என தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

‘விஸ்வரூபம்’ படத்தை, அ.தி.மு.க-விற்கு மிகவும் வேண்டிய ஒரு, ‘டிவி’ நிறுவனம் அடிமாட்டு விலைக்கு வாங்க முயன்றுள்ளது; அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மறுத்துள்ளனர். பின், அதிக விலைக்கு, வேறொரு, ‘டிவி’ நிறுவனத்திற்கு விற்று விட்டது தான் காரணம் என ஒருசாரார் சொல்கின்றனர். நிதி அமைச்சர் சிதம்பரம் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில், கமல் பேசுகையில், “வேட்டி கட்டிய ஒரு தமிழன் பிரதமராக வர வேண்டும்” என சிதம்பரத்தை குறிப்பிட்டு பேசியதும் கோபத்திற்கு ஒரு காரணம் எனக் கூறுகின்றனர்.

ஆனால், இந்தக் கருத்துக்கள் எல்லாம், எந்த அளவிற்கு உண்மை என்று நமக்குத் தெரியவில்லை. ஜெயலலிதாவிற்கு, கமல் மீதான பகை என்பது இப்போது ஏற்பட்டதல்ல; எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த போது ஏற்பட்டது.

கமல் நடித்த, ‘விக்ரம்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி ஒன்றில், எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட போது, ஜெயலலிதா, தன் கைப்பட எம்.ஜி.ஆருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில், “கமலின், விக்ரம் படத்தின் நிதி சேர்க்கும் சிறப்புக் காட்சியில், நீங்கள் கலந்து கொள்ள சம்மதித்தும், உங்களை அவமானப்படுத்தும் விதத்தில் விளம்பரமே செய்யவில்லை. கமல் படம் வெளியான நாளன்று, ஒவ்வொரு நாளிதழிலும் முழு பக்க விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. தனக்காக, முழு பக்க விளம்பரம் கொடுக்க மட்டும் கமலுக்குத் தெரிகிறது. ஆனால், மக்கள் செல்வாக்கு உடைய முதல்வரை அழைத்து விட்டு விளம்பரமே செய்யவில்லை என்றால் கமல் உங்களை கிள்ளுக்கீரை என்றா நினைத்தார்’ என்றெல்லாம் எழுதியதை, நினைவு கூர்ந்தால் எதற்காக இந்தத் தடை என புரிகிறதா இல்லையா! இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

TAGS: