விஸ்வரூபம் படத்தில் கமல் நீக்க ஒப்புக் கொண்டுள்ள காட்சிகளின் விவரம்

vishwaroopam-movieசென்னை: விஸ்வரூபம் படத்தில் கமல் நீக்க ஒப்புக் கொண்டுள்ள 7 காட்சிகள் குறித்த விவரம் தெரிய வந்துள்ளது.

விஸ்வரூபம் படம் தொடர்பான முத்தரப்பு பேச்சு வார்த்தையின்போது இஸ்லாமிய அமைப்பினர் 15 காட்சிகளையும், சில வசனங்களையும் நீக்க வேண்டும் என்று கூறினார்கள். உடனே கமலஹாசன் தனது மடிக்கணினியில் பதிவு செய்துள்ள அந்த காட்சிகளை போட்டுக் காட்டி விளக்கினார். அவைகளை வெட்டினால் கதையின் தொடர்ச்சி இல்லாமல் போய் விடும் என்றார்.

இதையடுத்து 7 காட்சிகளை நீக்கவும், மற்ற இடங்களில் வசனங்களை நீக்கவும் ஒப்புக் கொண்டார்.

* படத்தின் தொடக்கத்தில், “இது இஸ்லாமியர்களுக்கு எதிராகவோ மற்ற சாதி-மதத்தினரின் கோட்பாடுகளுக்கு எதிராகவோ எடுக்கப்பட்ட படம் அல்ல, இது ஒரு கற்பனை கதை,” என டைட்டில் போடப்படும்.

* படத்தில் ஆங்காங்கே காட்சிகளின் போது ஒலிக்கும் திருக்குர்ரான் வசனங்கள் நீக்கப்பட்டு வெறும் காட்சிகள் மட்டும் ஓடும்.

* திருக்குர்ரான் வசனம் பின்னணியில் அமெரிக்கரின் தலை துண்டிக்கப்படும் காட்சிகளும், வசனமும் நீக்கப்படும்.

* அமெரிக்காவில் குண்டு வெடிப்பை தடுப்பதற்காக கமல்ஹாசன் பிரார்த்தனை செய்யும் காட்சிகளும், பின்னணியில் தெரியும் தொழுகை நடத்தும் காட்சிகளும் நீக்கப்படும்.

* முல்லா ஒமர் கோவையிலும், மதுரையிலும் தலை மறைவாக இருந்தார் என்பதை சித்தரிக்கும் காட்சிகள் நீக்கப்படும்.

* நடிகர் நாசர் ஒரு காட்சியில், “முஸ்லிம் அல்லாதவர்களை அப்புறப்படுத்துவதே முஸ்லிம்களின் கடமை” என்று வசனம் பேசுவார். அந்த காட்சிகள் நீக்கப்படும்.

* ஆப்கன் சிறுவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு விளையாடுவது போல காட்டப்பட்டுள்ளதும் நீக்கப்படும்.

பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் படத்திற்கான தடையை நீக்க, தமிழக அரசு, கலெக்டர்களுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னையில் தடை நீக்கப்படுவதாக சென்னை காவல்துறையினர் ஆணையர் ஜார்ஜ் நேற்று அறிவித்தார்.

விஸ்வரூபம்’ படத்திற்கான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள், நீக்கும் பணி நடக்கிறது. காட்சிகள் நீக்கப்பட்ட பின், தணிக்கை வாரியத்தில் படத்தை திரையிட்டு காட்டி, “யு’ சான்றிதழ் பெற, கமல் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில், 8ம்தேதி, “ரிலீஸ்’ ஆகும் எனத் தெரிகிறது.

TAGS: