முருகா, தைப்பூசம் முடிஞ்சி ஒரு வாரத்துக்குப் பிறகு இதை நான் வேண்ட சில காரணம் இருக்கு. கூட்டம் குறையுமுன்னு பார்த்தா ‘ஒற்றுமை பொங்கலுக்கு’ எங்க பிரதமர் தந்த ஓஸி பேருந்தால பத்துமலையில கடுமையான நெரிசல். உன்னைப் பார்க்க மக்கள் ‘ஒற்றுமை பொங்கல்’ பேருந்தைப் பயன்படுத்திக்கிட்டதைப் பத்தி எங்க பிரதமருக்கு இன்னும் தெரியாது. நம்ம மக்கள் விஷத்தையே தேன் மாதிரி குடிப்பாங்க. தேனே தேடி வந்தா விடவா போறாங்க… எனவே கூட்டம் குறையனுமுன்னு காத்திருந்தேன்.
சரி அது இருக்கட்டும்… இப்ப நான் சொல்ல வந்த விசயமே வேற. அது எங்க ம.இ.கா தலைவர் பழனிவேல் பற்றியது. அவருக்கு ஒரு விசித்திரமான பிரச்னை… கோடியில ஒருத்தருக்கு வரும் பிரச்னை…. சொன்னா சிரிக்கக் கூடாது. அவரால ரோட்ட தாண்ட முடியல. உலகத்துல உள்ள அபூர்வமான சிக்கல், எங்க பழனிக்கு வந்திருக்கு… இது நியாயமா?
ம.இ.காவுல சரவணன் இருக்காரு… சுப்ரமணியம் இருக்காரு… இவங்க எல்லாமே உன்னோட வெவ்வேறு அவதாரம்தானே… அப்படி இருக்க, நீ ஆண்டியாகி கோவணத்தோட நின்ன அவதாரத்தையா எங்க தலைவரா ஆகனும்?
பழனிவெல் மேல தப்பு இல்ல. அவர் என்ன பண்ணுவார் பாவம். அவரும் தாண்ட படாத பாடு படுறாரு… ஆனா ஒரு அடி எடுத்து வைத்தவுடன் அவரால அதுக்கு மேல முடியாம போயிடுது. இவர நம்பி இருக்கும் பாரிசான எப்படிக் காப்பாத்த போற முருகா ? அவரால எங்க ‘சத்து மலேசியா’ பிரதமரும் ஆண்டியாயிருவார் போலிருக்கே முருகா.
இந்தியர்கள் பாரிசான் மேல நம்பிக்கை இழக்க ம.இ.கா தலைவர்களின் அலட்சியம் ஒரு காரணமுன்னு இன்னுமா அவருக்கு தெரியல.
நான் சொல்றதுல நம்பிக்கை இல்லனா… நீயே நேரா அவர் வீடு இருக்கிற தாமான் மெலாவாத்திக்கு வா. அங்கிருந்து அவர் வீட்டு ரோட்டை தாண்டுனா தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி. அது ஒரு முழு அரசாங்க உதவி பெற்ற பள்ளினு சொல்லிக்கிறாங்க. ஆனால் இன்னிக்கு வரைக்கும் கட்டட வசதி இல்லாம திண்டாடுது அந்தத் தமிழ்ப்பள்ளி.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கமும் ரோட்டத் தாண்டி போயி எவ்வளவோ டத்தோ பழனிவேலுகிட்டு கேட்டுப் பார்த்தாச்சி. இப்ப வரைக்கும் ஒழுங்கா ஒரு பதில் இல்ல. எவ்வளவு முடியுமோ அவ்வளவு இழுத்தடிக்கிறார். அவர சொல்லி என்னப் பண்ண… ரோட்டத் தாண்ட முடியாத அவரால இந்தப் பள்ளிப் பிரச்னைய எப்படித் தீர்க்க முடியும்?
அப்படி என்ன பள்ளியில பிரச்னைனு கேட்கறியா? சகலமும் அறிந்த உனக்குத் தெரியாததா?
ஒழுங்கான அறிவியல் அறை, ஆசிரியர் அறை, வாழ்வியல் அறை என எதுவுமே இல்ல. இரு நேரப் பள்ளியாக இயங்கும் அப்பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டத் தொடங்கியிருக்காங்க. ஆசிரியர்களின் நிலை இன்னும் பரிதாபம். மாலை பள்ளி ஆசிரியர்கள் வந்தால் காலை நேர ஆசிரியர்கள் அமர இடம் இல்லாமல் இருக்கும் நிலை. காலை ஆசிரியர் அமர்ந்திருந்தால் மாலைப் பள்ளி ஆசிரியர்கள் இடம் இல்லாமல் நின்றுக்கொண்டிருப்பாங்க.
இதென்னவோ ஒரு தோட்டத்தின் உள் புறத்துல நடக்குற சங்கதி இல்ல முருகா. நன்கு வளர்ச்சி அடைஞ்ச பட்டணப்பள்ளி அது. பொருள் வைக்க இடம் இல்லாம தவிச்சப்ப நல்ல வேளையா சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஒரு ‘கொண்டேய்னர்’ (conteiner) கொடுத்து உதவுனாங்க.
இவ்வளவு சிக்கல் இருந்தும் பழனிவேலு அவர்களால் ரோட்டைத் தாண்ட முடியாத சூழலால், இப்பள்ளியில் கட்டட சிக்கல் தீர்ந்த பாடில்லை. ஒருவேளை இது முழு அரசு உதவி பெரும் பள்ளியாக இல்லாது போனாலும் நம்ம பெற்றோர்களே ஏதோ பணம் திரட்டி கட்டடம் எழுப்பிடுவாங்க. ஆனா, முழு அரசாங்கப் பள்ளியில் அதெல்லாம் முடியாதே.
‘தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு தமிழ்ப்பள்ளியில் பிரச்னையையே தீர்க்க முடியாத இவரா சமுதாயத்தில் நிலவும் ஏனைய சிக்கல்களைத் தீர்க்கப் போகிறார்’ என பெற்றோர்களும் புலம்ப ஆரம்பித்துவிட்டனர் முருகா. அவர்களுக்கு டத்தோ பழனிவேலு ரோட்டைத் தாண்ட முடியாத சூழல் தெரியாது.
இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை முருகா! உன் அருளால நேரா டத்தோ ஜி.பழனிவேலு வீட்டிலிருந்து மெலாவாத்தி தமிழ்ப்பள்ளிக்கு ஒரு பாலம் போட்டுக்கொடுத்திடு. அவர் ரோட்டைத் தாண்டினால்தான், அந்தப் பள்ளியின் பிரச்னை தீரும்…
இல்லனா… என்னதான் எங்க பிரதமர் எல்லா பிள்ளைகளுக்கும் நூறு ரிங்கிட் கொடுத்தாலும் ஓட்டை மாற்றி குத்த பெற்றோர்களுக்கும் தெரியும்.
(முக்கிய குறிப்பு : மஇகா தலைவர் பழனிவேல் 2011-ஆம் ஆண்டு தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி பரிசளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தபோது அப்பள்ளிக்கு அவர் வழங்கிய பொன்னான வாக்குறுதிகளை இங்கு இணைக்கப்பட்டுள்ள காணொளி வழி நீங்களும் கண்டு ரசிக்கலாம். காணொளி 100% அசலானது!)
இப்படிக்கு
ஒரு முருக பக்தன்