அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியும் முதல்வர் ஜெயலலிதாவுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாத வைகோ, அ.தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்தும், போராட்டங்கள் நடத்தியும் வந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
2வது நாளான இன்று நடைபயணம் மேற்கொண்ட வைகோவை முதல்வர் ஜெயலலிதா இன்று திடீரென சந்தித்து பேசியது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், சிறுதாவூர் அருகே பையனூரில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வைகோ நடந்து வந்ததை பார்த்த முதல்வர் ஜெயலலிதா தனது காரில் இருந்து இறங்கினார்.
மதுவிலக்கை வலியுறுத்தி மேற்கொண்டுள்ள நடைபயணம் குறித்து அப்போது ஜெயலலிதா வைகோவிடம் கேட்டறிந்ததோடு நலம் குறித்தும் விசாரித்தார்.
15 நிமிடங்கள் வைகோவுடன் பேசிய ஜெயலலிதா, வாழ்த்து தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார்.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க இந்த சந்திப்பு ஒரு அச்சாரமாக இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போது, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெளியேறிவிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் அதாவது தா.பாண்டியன் மட்டுமே ஜெயலலிதாவுடன் நெருக்கமாக உள்ளார்.
மேலும்> சரத்குமார் உள்ளிட்ட சிறிய கட்சிகள் மட்டுமே கூட்டணியில் உள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் வைகோவை எப்படியும் இழுத்துவிட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.