ஹைதராபாத் குண்டுவெடிப்பில் 11 பேர் பலி

hydrabad_blastஇந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் தொடர்ச்சியாக இரண்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்புக்களில் குறைந்தபட்சம் 11 பேராவது கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

உள்ளூர் நேரப்படி மாலை 7.30 மணியளவில் இந்தக் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.

மக்கள் நெரிசல் மிக்க நகரில் இருக்கும் ஒரு பஸ் நிலையத்தில் ஒரு குண்டு வெடித்துள்ளது. சில நிமிட நேரத்தில், சினிமா அரங்கு ஒன்றிலும் குண்டு வெடித்திருக்கிறது.

சைக்கிள்களிலேயே இந்த குண்டுகள் பொருத்தப்படிருந்ததாக இந்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் சிண்டே பிபிசிக்கு கூறியுள்ளார்.

இரண்டு குண்டுகளுமே சுமார் 150 மீட்டர்கள் தூரத்திலேயே வெடித்ததாகவும் ஒரு இடத்தில் 8 பேரும் அடுத்த இடத்தில் 3 பேரும் இறந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

50 பேர் வரை இதில் காயமடைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் காட்சிகளை தொலைக்காட்சிகள் காண்பித்தன.

இந்தக் குண்டுவெடிப்புக்களுக்கான காரணத்தை போலிஸார் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஹைதராபாத்தின் ”டில்சுக் நகர்” பகுதியிலேயே இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது. எப்போதும் சனநெருக்கடி உள்ள இடமான இங்கு சினிமா அரங்குகள், வணிக நிலையங்கள், சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் பழம், காய்கறி சந்தையும் உள்ளது.

கடந்த வருடத்தில்தான் பிரிட்டன் இந்த நகரத்தில் ஒர் புதிய துணைத் தூதரகத்தை திறந்தது.

TAGS: