‘ஜெனிவாவில் இந்திய நிலைப்பாடு மாறாது’ – மன்மோகன் சிங்

manmohan_singhஐநாவின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கை விடயத்தில் இந்தியா கடந்த தடவை எடுத்த நிலைப்பாட்டையே இந்தத் தடவை எடுக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற இரு அவை உறுப்பினர்களும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து பேச்சு நடத்தியுள்ளார்கள்.

அந்தப் பேச்சுவார்த்தையின் போதே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக இந்திய நாடாளுமன்றத்தின் மேலவைக்கான காங்கிரஸ் கட்சி உறுப்பினரான சுதர்சனம் நாச்சியப்பன் தெரிவித்தார்.

அத்துடன் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13 வது திருத்தச் சட்டத்தை இலங்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தும் என்றும் இந்திய பிரதமர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

அதேவேளை வடக்கு கிழக்கு தமிழர் பாரம்பரிய நிலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தாம் இலங்கை அரசாங்கத்தை கேட்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட 37 அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்திய, இலங்கையை வலியுறுத்தும் என்றும் இந்திய பிரதமர் கூறியுள்ளார்.

TAGS: