மதுரையிலுள்ள இலங்கை பணிமனை மீது கடும் தாக்குதல்

Mihin-Air-ticketingமதுரையில் செயல்படும் ட்ரான்ஸ்லங்கா எனும் விமானப் பயணிகள் சேவை நிறுவன பணிமனை நேற்று பிற்பகலில் தமிழ் உணர்வாளர்களால்  தாக்கப்பட்டு கடும் சேதத்திற்குள்ளானது.

குண்டாந்தடிகளை ஏந்தி வந்த அவர்கள், பணிமனையில் இருந்தவர்களிடம், தமிழர்கள் தொடர்ந்து இலங்கையில் தாக்கப்பட்டுவரும் வேளையில் நீங்கள் பயணிகளை அங்கே அனுப்புவதா எனக்கேட்டு மிரட்டிவிட்டு கணினி, நாற்காலி, மேசைகள் போன்றவற்றை அடித்து நொறுக்கியிருக்கின்றனர். ஆனால் பணிமனைப் பணியாளர்கள் எவரும் தாக்கப்படவில்லை. பிறகு தாக்கியவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் சஞ்சய் மாத்தூர் தெரிவித்தார்.

அண்மைக் காலமாக இலங்கை தொடர்புடைய வங்கி, விமான நிறுவன பணிமனைகள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருக்கும் மஹாபோதி சங்க பணிமனை, அங்கு வரும் புத்த பிக்குக்கள், தமிழகப் புனிதத்தலங்களுக்கு இலங்கையிலிருந்து வரும் தமிழர்கள் இப்படிப் பலரும் தாக்குதல்களுக்குள்ளாயிருக்கின்றனர்.

யாழ் ஆயர் தாமஸ் சௌந்திரநாயகம் கூட அவ்வாறு இலங்கை யாத்திரிகர்களைத் தாக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக அரசின் காவல்துறை வட்டாரங்களோ இலங்கை தொடர்பான பணிமனைகளுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறுகின்றன.

TAGS: