மாலுமிகளை திருப்பி அனுப்பாத இத்தாலி; கோபத்தில் இந்தியா!

italyஇந்தியாவில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தனது கடற்படையினர் இருவரை இந்தியாவுக்குத் திரும்ப அனுப்ப முடியாது என்று இத்தாலி அறிவித்துள்ளது இந்தியாவில் கடுமையான எதிர்ப்புக்களை தோற்றுவித்துள்ளது.

இத்தாலியின் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் தம்மிடம் தெரிவித்ததாக அவரை செவ்வாய் கிழமை சந்தித்த கேரளாவின் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சட்டரீதியாக ஆய்வு செய்யப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மால் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கேரளக் கடற்கரைக்கு அப்பால் மீன் பிடித்துக் கொண்டிருந்த இரண்டு மீனவர்கள், இத்தாலிய சரக்குக் கப்பலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இத்தாலிய கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதையடுத்து சம்பந்தப்பட்ட கப்பலில் இருந்த இரு கடற்படையினர் கைது செய்யப்பட்டு இந்தியாவில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியும் அது தொடர்பான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படவில்லை. இந் நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை தமது குடும்பத்தோடு இவர்கள் இருவரும் கழிக்க அனுமதிக்க வேண்டும் என்று வைக்கப்ப்ட்ட கோரிக்கையை கடந்த ஆண்டு இறுதியில் இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்றது. அந்த இருவரும் அவர்கள் உறுதியளித்த்து போலவே கிறிஸ்துமஸ் முடிந்தவுடன் இந்தியாவுக்குத் திரும்பி வந்தனர்.

அதன் பிறகு இத்தாலியத் தேர்தலில் வாக்களிக்கத் தாம் செல்ல வேண்டும் என்று இருவரும் மனு செய்தனர். தேர்தல் முடிந்தவுடன் இவர்கள் திரும்புவார்கள் என்ற உறுதிப்பாட்டை இத்தாலிய அரசும் வழங்கியது. ஆனால் அங்கே தேர்தல் முடிந்த நிலையில் அவர்கள் இனி திரும்ப மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல் கொள்ளையர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறும் இத்தாலி, இந்த சம்வம் சர்வதேசக் கடல் பரப்பில் நடைபெற்றலால் இது குறித்து இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்கக் கூடாது என்றும் அந்நாடு கூறிவந்தது. பாதிக்கப்பட்ட இரு மீனவர் குடும்பங்களுக்கும அது பண உதவியை அளித்தது. ஆனால் இந்த விடயம் கேரளாவில் உணர்ச்சி பூர்வமாக பார்க்கப்படுகிறது. இது குறித்த வழக்கு இந்தியாவில்தான் நடக்க வேண்டும் என்று அம்மாநில அரசியல்வாதிகள் கோருகின்றனர்.

ஆனால் குறிப்பிட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் சர்வதேசக் கடல் பரப்பில் நடைபெற்றுள்ளதால் ஐ நாவின் கடல் குறித்த சட்ட விதிகளின் அடிப்படையில் ராஜதந்திர முறையில் தீர்வு காண வேண்டும் என்று இத்தாலி கூறுகிறது.

TAGS: