சென்னை: இலங்கை தமிழர் பிரச்னையில் அரசியலை துளியும் அண்டவிடாமல் தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்தும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டுவர வழியுறுத்தியும், சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் இம்மாதம் 11-ம் தேதி உண்ணாவிரதம் இருந்தனர். இந்த போராட்டத்திற்கு ஆதராவாக தமிழகம் முழுவதும்கல்லூரி மாணவர்களிடம் தூண்டுதலாக அமைந்தது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சட்டக்கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரகாலமாக பல்வேறு சட்டக்கல்லூரிமாணவர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தினை துவக்கியுள்ளனர்.நேற்று சென்னையில் கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டமும், பேரணியும் நடத்தி வருகின்றனர். சென்ன மெரீனா கடற்கரையிலும் மாணவர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தினை நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அரசியல் சார்பற்ற போராட்டம்
இந்த போராட்டத்தில் அரசியலை துளியும் கலக்கவிடாமல் தன்னெழுச்சியாக இந்த நடத்தி வந்த போராட்டத்தினை கோவை, திருச்சி, நெல்லை, வேலூர் , கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுவருகின்றனர்.
இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். ராஜபக்ஷேயை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் கோஷமாக இருந்தது. இந்த உண்ணாவிதப் போராட்டத்தில் சில மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிரமடைந்துவரும் போராட்டத்தால் பல கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில கல்லூரிகளில் பட்டமளிப்பு விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாணவர் ஒருவர் கூறியதாவது: சென்னையில் 25 கல்லூரிகளை ஒருங்கிணைந்து மாபெரும் பேராட்டத்தை நடக்க திட்டமிட்டுள்ளோம். இலங்கையில் இனப்படுகெலை நடத்தியதில் இந்திய அரசுக்கும் பங்குண்டு. இதனை கண்டித்து எங்களின் போராட்டம் தொடரும் என்றார். சென்னையில் ஐ.ஐ.டி. மாணவர்களும் பங்கேற்றனர். அவர்கள் இலங்கை அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.மும்பை, பெங்களுரூ, ஐதரபாத் நகரங்களிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் போராட்டம் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தைச் சேர்ந்த முருகையா சுகிந்தன் கூறுகையில், மாணவர்கள் போராட்டம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.இந்தியாவின் கொள்கையிலும் மாற்றம் வரும் என்றார்.