தமிழகம் எங்கும் மாணவர்களின் எழுச்சி போராட்டம் நடந்து வருகிறது. வெகுண்டெழுந்த மாணவர்களை அடக்க முடியாமல் தவிக்கிறார்கள் காவல் துறையினர்.
“தனித் தமிழ் ஈழமே தமிழர்களுக்கான நிரந்தர தீர்வுக்கு வழி வகுக்கும். அதை செய்ய உலக நாடுகளே முன்னே, வாழத் துடிக்கும் ஈழ மக்களிடம் வாக்கெடுப்பு நடத்து. அதில் தனித் தமிழ் ஈழமே மிஞ்சி நிற்கும். தனி ஈழ நாட்டை பிரகடணப்படுத்து. தனி தமிழ் ஈழம் அடையும் வரை இந்த மாணவ சமுதாயம் அடங்க மறுக்கும். வீதியில் போராடும்” என்ற முழக்கமிட்டபடி ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பட்டுக்கோட்டை நகர வீதிகளை தினறடித்தனர். இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினர் சிக்கித் தவித்தனர்.
குண்டாந்தடியைத் தூக்கினாலும், அடக்கு முறைக்கு அஞ்சமாட்டோம்! மாணவர்களின் தொடர் முழக்கப் போர்!
நெல்லை மாவட்டத்தில் அனைத்து கல்லூரிகளின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பாளை பேருந்து நிலையம் முன்பாக திரண்டிருந்தார்கள். ஈழத்தில் ராஜபக்சே நடத்திய இனஅழிப்பு படங்களை மக்களின் பார்வையில்படும்படி வைத்தும் பதாகைகளை ஏந்தியபடி தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குண்டாந்தடியைத் தூக்கினாலும், அடக்கு முறைக்கு அஞ்சமாட்டோம் சர்வதேச நீதி விசாரணை நடத்தக் கோரி ஐ.நா.சபையக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.
தமிழர்களின் தாகம் தமிழ் ஈழ தாகம் என்பதை வலியுறுத்திய மாணவர்களின் தொடர் முழக்கப் போர் காலை 10 மணி தொடங்கி. மலை 5 மணி வரை நீடித்தது.
தமிழீழம் இல்லையென்றால் தமிழ்நாட்டை பிரித்துக்கொடு; மாணவர்கள் ஆவேசம்
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களும் இன்று ஒருங்கிணைந்த போராட்டம் நடத்தினர். சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதன்போது பேசிய மாணவர்கள், ஈழத் தமிழர்களுக்கு சுய அதிகாரம், சுதந்திரமான வாழ்க்கை கிடைக்க வேண்டும். அவர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கை மீது இந்தியா பொருளாதார தடைவிதிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை இந்தியா எடுக்காமல் இலங்கை நட்பு நாடு என்று சொல்லிக்கொண்டிருந்தால் மாணவர்கள் நாங்கள் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டோம்.
ஈழத்தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும். இது இல்லையென்றால் எங்களின் தமிழ்நாட்டை பிரித்து கொடுங்கள். நாங்கள் தனி தமிழ்நாடு அமைத்துக்கொள்கிறோம் என்று ஆவேசமாக கூறினர்.
மும்பையில் திரண்ட 20,000 தமிழர்கள்…
ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை கோரியும், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) காலை 11.30 மணிக்குக் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
கொளுத்தும் வெயில் என்றும் பாராமல் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்பாட்டத்தில் பங்கு ஏற்றனர்.
நாய் கழுத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான வாசகங்கள்
இலங்கை அதிபர் ராஜபச்சேவுக்கு எதிராக திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள பாளையம் பகுதியில் அனைத்து கடைகள் முன்பும் தமிழீன துரோகி ராஜபச்சே ஒழிக என்ற வாசகங்களும் மேலும் ராஜபச்சேவுக்கு எதிரான வாசகங்களும் அதற்கு துணை போகும் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்களும் ஒட்டப்பட்டுள்ளன.
இது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மற்றொரு சுவாரசிய போராட்டமாக சாலைகளில் சுற்றி திரியும் நாய்களின் கழுத்துகளில் ராஜபச்சேவுக்கு எதிரான வாசகங்களை தொங்க விட்டுள்ளனர்.
சாலையை கடந்து செல்பவர்களும், பஸ்சில் பயணம் செய்பவர்களும் ஒரு நிமிடம் இறங்கி இந்த வினோத போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து செல்கின்றனர்