தமிழகம் முற்றுகை : ஈழத்திற்காக பொங்கியெழும் மாணவர்கள்!

lanka_350_031813061315இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை, தனி ஈழம் குறித்து பொது வாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் பல்வேறு இடங்களில் இன்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி புதுவையில் வேலைநிறுத்தம், கடையடைப்பு போராட்டத்திற்கு இன்று பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதிகட்டப் போரின்போது, அப்பாவித் தமிழர்களைத் திட்டமிட்டுக் கொன்று குவித்த ராஜபக்சவைப் போர்க்குற்றவாளி என அறிவிக்க வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்களின் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் அரசு, தனியார் கல்லூரி மாணவர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு உலகத் தமிழர்களிடையே ஆதரவு கிடைத்து வருகிறது.

chennai-protestsஇந்த போராட்டம் அறப்போராட்டமாக இருந்தாலும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. எனினும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒருங்கிணைத்து மாணவர்கள் போராடி வருகின்றனர்.

சென்னையில் தொடங்கி…

தமிழீழம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி, தலைநகர் சென்னையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காமராஜர் சாலையில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், ராஜபக்சேவின் உருவபொம்மையை மேளம் தாளம் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று தீவைத்தனர். இதனால் மெரினா கடற்கரை சாலையில் சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலையில் ரயில் மறியல்

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 60 பேர் திருவண்ணாமலை இரயில்வே நிலையத்தை முற்றுகையிட்டனர். மன்னார்குடியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் இரயிலை மாணவர்கள் நிறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதனை மோப்பம் பிடித்த போலீஸார், ரயிலை மறித்தால் உங்களை கைது செய்வோம், அதனால் கலைந்து போங்கள் என மிரட்டினர். எனினும் மாணவர்கள் கலைந்து செல்லாமல், இரயில் மீது ஏறியும், தண்டவாளத்தில் அமர்ந்தும் ராஜபக்சேவுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் கோஷமிட்டனர். உடனடியாக மாணவர்களை கைது செய்த போலீசார், மண்டபத்தில் அடைத்தனர். இந்த போராட்டத்தினால் ரயில் ஒரு மணிநேரம் தாமதமாக சென்றது.

chennai-protests2பிரதமரின் உருவ பொம்மை எரிப்பு

இலங்கையில் இனப் படுகொலையைத் தடுக்கத் தவறிய மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஈரோட்டில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

முற்றுகையிடத் திட்டம்

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் கல்லூரி மாணவர்கள் பத்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களிலும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் இன்று முற்றுகைப் போராட்டங்கள் நடத்தவும் மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

துவையில் கடையடைப்பு

தமிழகத்தைப் போன்று, புதுவையிலும் மாணவர் போராட்டம் எழுச்சி பெற்றுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி, புதுச்சேரியில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுப்பு

மாணவர்கள் அரசியல் கட்சியினர் எவரும் எங்கள் போராட்டத்துக்குள் நுழையக்கூடாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு நாங்கள் போராடி வருகிறோம் என்பதால், அரசியல்வாதிகள், பொதுஅமைப்புகளைச் சேர்ந்தவர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியிட்டனர். இதனால் போலீசார் அரசியல் கட்சியினர் எவரையும், மாணவர்களின் போராட்டத்துக்குள்ளே அனுமதிக்கவில்லை.

TAGS: