இந்திய சினிமா விழா – தமிழ் சினிமா புறக்கணிப்பு

Indian Film Festivalஇந்திய மத்திய அரசு சார்பில் கொண்டாடப்படும், “இந்திய சினிமா’ விழாவில், தமிழக சினிமா துறையின் பங்களிப்பு, முற்றிலுமாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, பிரதமரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டுள்ளது. பிரமாண்டமான இந்திய சினிமாவை போற்றும் வகையில், டில்லியில், மத்திய அரசின் சார்பில், பிரமாண்டமான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த, 25ம் தேதி துவங்கிய விழா கொண்டாட்டங்கள், வரும், 30ம் தேதி வரை நடக்கின்றன.

தாதா சாகேப் பால்கேயின் முதல் சினிமாவான, “ராஜா ஹரிச்சந்திரா’ 1913ம் ஆண்டு வெளியானது. இதை மையமாக வைத்தே, இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நடந்து வருகிறது. ஆனாலும், விழாவில், முற்றிலும் இந்தி சினிமாவே முன்னிலைப்படுத்தப் படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், தென்காசி லோக்சபா தொகுதி எம்.பி., லிங்கம் சார்பில், மத்திய செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரியிடம், ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில்,  ‘’இந்திய சினிமாவில், 5,000 சினிமாக்களை தயாரித்துள்ள பெருமை, தமிழ் சினிமா துறைக்கு உண்டு. தியாகராஜ பாகவதரில் துவங்கி, சிவாஜி, எம்.ஜி.ஆர்., இளையராஜா, ரகுமான், ரஜினி, கமல் என, மிகப்பெரிய ஜாம்பவான்களை எல்லாம், சினிமா உலகத்திற்கு தந்தது தமிழ் சினிமாவே. தமிழ் சினிமாவைச் சேர்ந்த, எண்ணற்ற தொழில்நுட்ப கலைஞர்களை, இன்றும் கூட பாலிவுட் பயன்படுத்துகிறது. அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தமிழ் சினிமாவையும், அதன் பங்களிப்பையும், மத்திய அரசு, இப்போதைய விழாவில் இருட்டடிப்பு செய்துள்ளது. எல்லாமே, இந்தி சினிமா பற்றியே உள்ளது.

இந்திய சினிமா என்றால், இந்தி சினிமா மட்டும் தானா? இந்த நிலை, வேதனையளிப்பதாக உள்ளது. இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் மணீஷ் திவாரி, “அப்படியா… விழாவில் தமிழ் சினிமா குறித்த எதுவும் இல்லையா… இந்த விவரம் எனக்கு தெரியாது. இது தொடர்பாக விசாரிக்கிறேன்’ என கூறியதாக, அவரைச் சந்தித்த பின், நிருபர்களிடம் பேசிய லிங்கம் எம்.பி., கூறினார். இதே போன்ற கோரிக்கை மனு, பிரதமர் அலுவலக அதிகாரிகளிடமும் அளிக்கப்பட்டுள்ளது.

TAGS: