இராமதாஸ் கைது எதிரொலியாக தொடரும் வன்முறைகள்

pmk_fireபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் இராமதாஸ் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் ஆங்காங்கே வன்முறைகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.

திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் உள்ள பாலம் ஒன்றில் புதனிரவு வெடிகுண்டு வெடித்ததில், பாலத்தில் ஒரு மீட்டர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்து மேலும் 5 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை அருகே நேற்று நள்ளிரவு கண்டெய்னர் லாரி ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டது. இந்த கண்டெய்னர் லாரி இரு சக்கர வாகனங்களை ஏற்றிக் கொண்டு வந்தது. அதில் சுமார் 50க்கும் மேற்பட்ட புதிய இரு சக்கர வாகனங்கள் இருந்தன. இவை அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின.

ஹரியானா மாநிலத்தில் இருந்து கடலூருக்கு புதிய இரு சக்கர வாகனங்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி திருவண்ணாமலை அருகே உள்ள அத்தியந்தல் ஏரிக்கரை வழியாகச் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் அந்த லாரி ஓட்டுநர் மீது பெட்ரோல் குண்டுகளை எறிந்திருக்கின்றனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைபெறும் லாரி ஓட்டுநரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இராமதாஸ் கைதானதிலிருந்து இதுவரை ஐந்து பேருந்துகள்எரிந்திருக்கின்றன. 200 வாகனங்கள் தகர்க்கப்பட்டிருக்கின்றன. ஆங்காங்கே கல்லெறிதல், மறியல் ஆகியவற்றின் விளைவாக சாலைப் போக்குவரத்து வடமாவட்டங்களில் ஓரளவு பாதிக்கப்பட்டிருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மூவாயிரம்பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

TAGS: