பாகிஸ்தான் சிறையில் கைதிகளால் தாக்கப்பட்ட நிலையில் மரணமான சரப்ஜித் சிங்கின் கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
1990 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக நடந்த குண்டுவெடிப்புகளில் 14 பேர் பலியானமை குறித்து பாகிஸ்தானிய நீதிமன்றம் ஒன்றினால் இவருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானிய சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் லாகூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அதிகாலை மரணமானார். தவறுதலாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த அவர் எந்தவித குற்றமும் அற்றவர் என்று கூறி அவரது குடும்பத்தினர் அவருக்கு மன்னிப்பு அழிக்க வேண்டும் என்று பல தடவைகள் கேட்டிருந்தனர்.
அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பதற்றமடையச் செய்யலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அப்சல்குருவுக்கு இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் சரப்ஜித் சிங்குக்கு மிரட்டல்கள் தொடர்ந்து இருந்துவந்ததாக அவரது சட்டத்தரணி கூறியுள்ளார்.