கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி

koodangulam_nuclear_power_plantகூடங்குளம் அணுமின்நிலையம் செயல்படுவதற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மேலும் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கை திரும்பப் பெறவும் அதிகாரிகள் ஆலோசிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கூடங்குளம் அணுமின்நிலையப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கூடங்குளம் அணுமின் நிலைய அணுக்கழிவு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மனுதாரர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வழக்கு தொடர்ந்திருந்தனர்.

மேலும் பாதுகாப்பு விதிகளை முறையாக செயல்படுத்தும்வரை அணு உலையை இயக்கத் தடை விதிக்கவும் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்தது.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் நாட்டின் அணு சக்தி கொள்கைக்கு உச்சநீதிமன்றம் மதிப்பளிக்கிறது. பயன்படுத்தப்பட்ட எரிபொருளை சேமிக்கும் முறையை மத்திய அரசு கையாள வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக இருப்பதாகவே அனைத்து குழுக்களின் அறிக்கைகளும் தெரிவித்திருக்கின்றன. இதனால் கூடங்குளம் அணு உலை செயல்பட தடை விதிக்க முடியாது.

கூடங்குளம் அணு உலை செயல்படலாம் என்று கூறியுள்ளனர். மேலும் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கை திரும்பப் பெறுவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி வழக்கறிஞர் சுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

இத்தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், ஒரு இனத்தின் எதிர்காலத்தை எங்கோ இருந்து வருகிற ஒரு நிறுவனம் தீர்மானித்து விட முடியாது. கூடங்குளம் அணு உலையில் மாதந்தோறும் ஒருவர் உயிரிழக்கின்றனர்.

கடந்த 5 மாதங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தீர்ப்பு ஏமாற்றத்தைத் தருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும் என்றார் .

கூடங்குளம் அணு உலை தொடர்பான தீர்ப்பு வெளியான நிலையில் அப்பகுதியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இத்தீர்ப்பைத் தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.

TAGS: