காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகை கோவிலில் இயற்கையாகவே பனிலிங்கம் தோன்றுவது வழக்கம். ஆண்டு தோறும் ஏராளமான பக்தர்கள் பனிமலைப் பாதையில் பயணம் மேற்கொண்டு இந்த லிங்கத்தை தரிசித்து வருகிறார்கள்.
2 மாதங்கள் மட்டுமே இந்தப் புனித யாத்திரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு யாத்திரை வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது.
அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வழி நெடுகிலும் ராணுவ பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே நிருபர்களிடம் கூறியதாவது:-
அமர்நாத் புனித யாத்திரைக்கு தீவிரவாதிகளால் மிரட்டல் உள்ளது. எனவே இந்த ஆண்டு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் பாதுகாப்புக்கு கூடுதலாக படைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. பக்தர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு கூறினார்.
முன்னதாக கடந்த திங்கட்கிழமை ராணுவத்தின் வடக்கு மண்டல கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் கே.டி. பர்நாயக் கூறுகையில் அமர்நாத் புனித யாத்திரையில் பிரச்சினை ஏற்படுத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.