ஸ்ரீநகர்: பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா நாளை ஸ்ரீநகர் வரும் நிலையில், ராணுவ கான்வாயை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 5 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர்.
ஸ்ரீநகர் அருகேயுள்ள பெர்மினா பகுதியில், ராணுவ வாகனங்கள் சென்ற போது, பயங்கரவாதிகள் இரு புறமும் இருந்து தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். இதனையடுத்து அந்த பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதே போன்ற தாக்குதல் சம்பவங்கள் வரும் காலங்களில் நடத்துவோம் என்றும், இதற்காக பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
ராணுவ கான்வாயை, பயங்கரவாதிகள் 12 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனையடுத்து ராணுவ வீரர்களும் திருப்பி தாக்கி, பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர். பான்ட் சவுக் பகுதியிலிருந்து பாரமுல்லா புறவழிச்சாலை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனத்தை இரண்டு பயங்கரவாதிகள் இரண்டு புறமும் தாக்குதல் நடத்தியதாக சி.ஆர்.பி.எப். ஐ.ஜி., நலின் பிரபாத் கூறினார்.
பெமீனா பகுதியிலிருந்து தப்பி சென்ற பயங்கரவாதிகள், ஸ்ரீநகரில் ஒரு சில இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பயங்கரவாதிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம், கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது சம்பவமாகும். கடந்த சனிக்கிழமை, ஸ்ரீநகரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் தாக்குதலில் இரண்டு போலீசார் பலியானார். இதனையடுத்து அப்பகுதி உஷார்படுத்தப்பட்டிருந்தது.
ஸ்ரீநகரில், காஷ்மீரின் குவாசிகுந்த் பகுதியிலிருந்து ஜம்முவின் பனிஹல் பகுதியை இணைக்கும் ரயில் சேவை துவக்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா, நாளை வர உள்ள நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், பிரதமரின் பயணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.