அரசு அறிவித்தப்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் செயல்படுமா?

india25613bதமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் முக்கியமான இடத்தை வகிப்பது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி. யானைகள் கூட்டம்.. கூட்டமாக அதிகமாக வாழும் காடும் இதுதான். கர்நாடக மாநிலத்தில் கடும் வறட்சி ஏற்படும் போது அப்பகுதியில் உள்ள யானைகள் கூட்டமாக சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வரும்.

காரணம் சத்தி- பவானிசாகர் வனப்பகுதியில் எப்போதும் வற்றாத ஆறாக மாயாறு பாய்ந்து வருகிறது. அள்ள.. அள்ள.. குறையாத அமுதசுரபி போல எப்போதும் மாயாற்றில் பேரிறைச்சலுடன் தண்ணீர் ஓடிகொண்டு இருக்கும். மேலும் இந்த மாயாற்றின் ஓரம் பரந்த நிலப்பரப்பில் யானைகள் கூட்டமாக தங்கும் இடமும் உள்ளது.

மற்ற பகுதிகளில் எல்லாம் வறண்டு போனாலும் மாயாற்றின் நீண்ட கரையோரம் உள்ள மரம், செடி, கொடிகள் எப்போதும் பசுமையாக இருக்கும். இதுவே யானைகளின் புகழிடமாகவும் மாறிவிட்டது. யானைகளுக்கு சத்தியமங்கலம் வனப்பகுதி எப்படி புகலிடமாக மாறிவிட்டதோ, அதேபோல் இப்போது புலிகளுக்கும் சத்தி வனப்பகுதி புகலிடமாக மாறி விட்டது என்று கூறலாம்.

இதற்கு காரணம் உண்டு. புலிகள் வசிப்பதற்கு கொஞ்சம் சமவெளி பகுதி.. அடர்ந்த வனப்பகுதி.. அதற்கு தேவையான உணவு.. தண்ணீர் வசதி.. இவை யாவும் புலிகள் வசிப்பதற்கு ஏற்ற இடம். இதில் ஒரு வசதிகூட இல்லை என்றாலும் அங்கு புலிகள் வசிக்காது.

இந்த அத்தனை வசதிகளும் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ளது. வற்றாத மாயாறு.. சுற்றியும் அடர்ந்த காட்டை கொண்ட சமவெளி பகுதி மற்றும் வகை.. வகையான மான் வகைகள் எல்லாம் அப்பகுதியில் உள்ளன. இதன் காரணமாக சத்தியமங்கலம்- பவானிசாகர், ஆசனூர்-தலமலை-கேர்மாளம் போன்ற பகுதியில் தற்போது புலிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வனத்துறையினர் எடுத்த கணக்கெடுப்பின்படி 15 புலிகள் இருந்தது. அடுத்த ஆண்டு அது 18 ஆக உயர்ந்து தற்போது 30 புலிகளாக உயர்ந்தது. ஆனால் அப்பகுதியை சேர்ந்த வன ஆர்வலர்கள் கூறும்போது, சத்தி வனப்பகுதியில் எப்படியும் குறைந்தது 50 புலிகள் இருக்கக்கூடும் என்று கூறினர்.

இதனால் சத்தியமங்கலம் வனப்பகுதியை மத்திய அரசு புலிகள் காப்பகமாக அறிவித்து உள்ளது. ஆனால் இந்த புலிகள் காப்பகத்துக்கு மலைவாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். “புலிகள் காப்பகம் அமைத்தால் எங்கள் வாழ்வுரிமை பாதிக்கப்படும். எங்களை வெளியேற்றி விடுவார்கள். நாங்கள் எங்கே போய் ஜீவானாம்சம் நடத்துவது?” என்றும் கேட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, “எங்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தை தடை செய்யவேண்டும். மத்திய அரசின் புலிகள் காப்பக அறிவிப்புக்கு மாநில அரசு இசைவு தெரிவிக்ககூடாது. மீறி புலிகள் காப்பகம் அமைத்தால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்” என்று கூறி உள்ளனர்.

பவானிசாகர் எம்.எல்.ஏ. (இந்திய கம்யூ.) சுந்தரமும், இவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு மண்டல வன பாதுகாவலர் வெங்கடேஷ் கூறும்போது, “ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் புலிகள் காப்பகம் அமைப்பது ஒரு வரப்பிரசாதமாகும். இதனால் மலைவாழ் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவர்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்றவும் மாட்டோம். அவர்கள் முழுமையாக நம்பலாம். ஆதலால் புலிகள் காப்பகம் அமைய அவர்கள் ஆதரிக்க வேண்டும்” என்று கூறினார்.

அதேபோல் சமூக வன ஆர்வலர்கள் கூறும்போது, “இந்தியாவில் புலிகள் காப்பகம் மிகவும் குறைவு. தற்போது சத்தியமங்கலத்தை புலிகள் காப்பகமாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம் மலைவாழ் பழங்குடி மக்களுக்கு பாதகம் ஏற்பட்டு விடாமல் இருக்கவேண்டும்” என்று கூறினர்.

TAGS: