மத்திய அரசு விற்கவிருக்கிற 5 சதவீத நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன பங்குகள் தமிழக அரசு நிறுவனங்களுக்கே விற்கப்படவேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரியிருக்கிறார்.
அத்தகைய விற்பனைக்குத் தமிழகத்தில் பல தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், ஐந்து சத பங்குகளை விற்பதென்று மன்மோகன் சிங் அமைச்சரவை கடந்த வெள்ளியன்று முடிவெடுத்தது.
நெய்வேலி நிறுவனத்தில் மத்திய அரசிற்கு 93.5 சதவீத பங்கிருக்கிறது. ஆனால் செபி எனப்படும் சுயாதீனமான முதலீடு குறித்த வாரியம் எந்தவொரு அரசு நிறுவனத்திலும் பொதுமக்களுக்கு குறைந்த பட்சம் 10 சதவீத பங்காவது இருக்கவேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது அதன்படியே இவ்விற்பனை என்கிறது மத்திய அரசு.
ஐந்து சதவீத பங்கினை விற்று 500 கோடி ரூபாய் திரட்டலாம். அதுவும் நெய்வேலி நிறுவனத்தை மேம்படுத்தவே பயன்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு வாதிடுகிறது
விற்பனைக்கெதிராக அணிதிரளும் நெய்வேலி நிறுவனத் தொழிலாளர்கள் முயற்சி கைவிடப்படாவிட்டால் வேலை நிறுத்தம் என எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று செவ்வாய் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதமொன்றில் முதல்வர் ஜெயலலிதா ஜூலை 3-லிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தம் என தொழிற்சங்கங்கள் அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டி, அவ்வாறு வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்கள் இறங்கினால் நெய்வேலியில் மின்சார உற்பத்தி தடைபடலாம், அது தமிழகத்தின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் எனக் கூறுகிறார்.
நெய்வேலி நிறுவனம் தனியார் மயமாகிவிடக்கூடும் என்ற தொழிலாளர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், விற்பனைக்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் ஐந்து சத பங்குகளை தமிழக அரசுக்குச் சொந்தமான தொழில் வளர்ச்சி நிறுவனங்கள் சிப்காட், டிட்கோ மற்றும் தொழில் முதலீட்டு நிறுவனமான டிக் போன்றவற்றிற்கு விற்கலாம் என முதல்வர் ஆலோசனை கூறியிருக்கிறார்.
அவ்வாறு செய்வது செபி விதிமுறைகளுக்கு இசைந்திருக்குமென்றும் எப்படியும் தனியார் நிறுவனங்களுக்கு பங்குகளை விற்கவேண்டாமென்றும் ஜெயலலிதா தனது கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.
தமிழக அரசின் இந்தக் கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த பொருளாதார ஆய்வாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் , நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், தமிழகத்தின் அடையாளத்தோடு சம்பந்தப்பட்டது என்றும், இதைத் தனியார்மயமாக்கவிடக்கூடாது என்பதில் இம்மாநிலத்தில் ஒரு அரசியல் கருத்தொற்றுமை இருக்கிறது என்றும் கூறினார்.
பொருளாதாரரீதியில்பார்த்தால், தமிழக அரசு, நஷ்டம் ஏற்படும் பல அரசு நிறுவனங்களைத் தனியார் மயமாக்கலாம், ஆனால் லாபமீட்டும் நெய்வேலி நிறுவனம் போன்றவற்றை தனியார் கைகளுக்குப் போகவிடக்கூடாது என்றார் ஸ்ரீநிவாசன். -BBC
முதல்வர் அவர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று கொள்ள வேண்டும் .