உத்தர்கண்ட் மீட்பு ஹெலிகாப்டர் விபத்து: பலியான 17 வீரர்கள் உடல் கண்டெடுப்பு

india26613bபுதுடில்லி: இமயமலை சுனாமி எனப்படும், பேய் மழையால் உருக்குலைந்து போன உத்தரகண்ட் புனித தலங்களை சீரமைக்க ரூ. 100 கோடியை மத்திய அரசு ஒதுக்கிட முடிவு செய்துள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இம்மாதம், 17ம் தேதி, உத்தரகண்ட் மாநிலத்தின் கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த பேய் மழையால், வானமே உடைந்து மழை ஊற்றியது போல், பேய் மழை பெய்ததில், மந்தாகினி, அலக்நந்தா, யமுனை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து நிலச்சரிவு ஏற்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாயினர். மீட்புப்பணியில் ராணுவம், இந்தோ- திபெத் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

உத்தரகண்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப்பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் மீட்புப்பணிகள் நடக்கின்றன. பத்ரிநாத் மலைப்பகுதியில் சிக்கிய யாத்ரீகர்கள் ,சிலர் கீழே இறங்கி வர கயிறுகளை கட்டி ஆபத்தான முறையில் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே உருக்குலைந்த உத்தரகண்ட் மாநிலத்‌தில் உள்ள புனித தலங்களை சீரமைக்க மத்திய அரசு ரூ. 100 கோடி ஒதுக்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், உத்தரகண்டில் வெள்ளத்தால் சேதமடைந்த புனித தலங்கள்,ஆன்மீக தலங்கள் ஆகியவற்றை மீண்டும் அதே நிலைக்கு கொண்டுவர ரூ. 100 கோடி ஒதுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் நேற்று நடந்த மீ்ட்பு ‌ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களின் 17 உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 3 பேரின் உடல்களை தேடும் பணி நடக்கிறது.

உத்தர்கண்ட் மீட்பு பணிகள் தொட்ரபாக இன்று அம்மாநில முதல்வர் விஜய் பகுகுணா கூறுகையில், மீட்புப்பணிகள் இன்னும் இரு நாட்களில் நிறைவு பெறும். ஏறத்தாழ அனைவரும் மீட்கப்படுவர். ஹர்சில் பகுதியில் சிலர் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணி நடந்து வருவதாகவும் கூறினார்.

இந்நிலையில் உத்தர்கண்டில் வெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த மேலும் 12 இன்று சென்னை திரும்பினர். உத்தர்கண்ட்மாநிலம் சிர்காம் பகுதியில் இருந்து மீட்கப்பட்டனர்.

TAGS: