டேராடூன்: உத்தர்கண்ட் மாநில வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு யார் உதவி செய்வது என்பது தொடர்பாக டேராடூன் விமான நிலையத்தில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இம்மாதம், 17ம் தேதி, உத்தரகண்ட் மாநிலத்தின் கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், வானமே உடைந்து மழை ஊற்றியது போல், பேய் மழை பெய்ததில், மந்தாகினி, அலக்நந்தா, யமுனை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து நிலச்சரிவு ஏற்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாயினர். மீட்புப்பணியில் ராணுவம், விமானப்படையினர் மற்றும் இந்தோ- திபெத் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரகண்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப்பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் மீட்புப்பணிகள் நடக்கின்றன. பத்ரிநாத் மலைப்பகுதியில் சிக்கிய யாத்ரீகர்கள் ,சிலர் கீழே இறங்கி வர கயிறுகளை கட்டி ஆபத்தான முறையில் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்த மழை வெள்ளத்தில் ஆந்திராவை சேர்ந்த 14 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 430 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்டவர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆந்திர மாநில மக்களை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் பின்னர் அவர், சிகிச்சை பெற்று வரும் மக்களை சொந்த ஊர் அனுப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளளது என, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், ஆந்திர மாநிலத்தவர்களை யார் அழைத்து செல்வது என்பதில் டேராடூன் விமான நிலையத்தில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் ஹனுமந்த ராவ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., ரமேஷ் ரத்தோடுக்கு இடையே, மோதல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெலுங்குதேசம் கட்சி சார்பில் வழங்கப்பட்ட விமான டிக்கெட்களை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹனுமந்த ராவ் கிழித்து எறிந்ததாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் மோதிக்கொண்டது விமான நிலையத்தில் உள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. இது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
தெலுங்கு தேசம் கட்சியின் ரமேஷ் ரத்தோடு கூறுகையில், நாங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தோம். அப்போது காங்கிரஸ் கட்சியின் ஹனுமந்த ராவ், எங்களை தகாத வார்த்தைகளால் கூறி திட்டினார். எங்களது உதவி பணிளில் அவரும் மற்றும் அவரது சகாக்களும் ஏன் தலையிட வேண்டும் என கூறினார்.
ஹனுமந்த ராவ் கூறுகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் போது தெலுங்கு தேசம் கட்சியினர் இடையூறு செய்தனர். இது போன்ற அரசியலில் ஏன் அவர்கள் ஈடுபடுகின்றனர். மூத்த அரசியல் தலைவரான சந்திரபாபு நாயுடுவும் இதுபோன்ற கீழ்தரமான அரசியலில் ஈடுபடலாமா எ ன கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், ஆந்திராவில் உள்ள பல மாவட்ட கலெக்டர்கள் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஆந்திராவிலிருந்து 2616 பேர் புனித யாத்திரை சென்று வெள்ளத்தில் சிக்கினர். அவர்களில் 1239 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 933 பத்திரமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன என கூறினார்.