புதுடில்லி: “தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனு தொடர்பாக, ஜனாதிபதி எடுக்கும் முடிவே, இறுதியானது. கருணை மனுக்கள் மீது, ஜனாதிபதி, ஒரு முடிவு எடுத்தபின், அதில், கோர்ட் தலையிடக் கூடாது’ என, சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கொடூர கொலை வழக்கில், அசாம் மாநிலத்தை சேர்ந்த, மகேந்திர தாசுக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டிலும், இந்த தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தன் தண்டனையை குறைக்க கோரி, ஜனாதிபதியிடம், 1999ம் ஆண்டு, மகேந்திர தாஸ், கருணை மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை, 12 ஆண்டுகளுக்கு பின், 2011ம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதியான, பிரதிபா பாட்டீல், தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், மகேந்திர தாஸ் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “என் கருணை மனுவை பரிசீலித்து, முடிவு எடுக்க, 12 ஆண்டுகள் தாமதமாகி விட்டன. இந்த காரணத்துக்காக, எனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, தள்ளுபடி செய்ய வேண்டும்’ என, தெரிவித்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், கருணை மனுவை பரிசீலித்து, தாமதமாக முடிவு எடுத்த காரணத்துக்காக, மகேந்திர தாசுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து, உத்தரவிட்டது.
இந்த உத்தரவு, மத்திய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், கருணை மனுவை பரிசீலிக்க தாமதமானதை காரணம் காட்டி, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டட பல கைதிகள், சுப்ரீம் கோர்ட்டில், சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர்.குறிப்பாக, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோரும், இதே காரணத்துக்காக, மனு தாக்கல் செய்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவு, இதேபோன்ற மற்ற வழக்குகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இதுகுறித்து, சுப்ரீம் கோர்ட்டில், விளக்கம் அளிக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகம், ஒரு மனுவை தயார் செய்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:தூக்கு தண்டனை கைதிகள் அளித்துள்ள, கருணை மனு தொடர்பாக, ஜனாதிபதி எடுக்கும் முடிவே இறுதியானது. இந்த மனுக்களை நிராகரித்தோ அல்லது ஏற்றுக் கொண்டோ, ஜனாதிபதி ஒரு முடிவை அறிவித்து விட்டால், அதுவே இறுதியானது.
அதில், கோர்ட் தலையிட முடியாது.அனைத்து நிலைகளிலும், விசாரணை முடிந்து, ஜனாதிபதி இறுதி முவு எடுத்தபின், அந்த வழக்கை மீண்டும் விசாரிப்பது, சம்பந்தப்பட்ட வழக்கை, முடிவில்லா, நிலைக்கு கொண்டு செல்லும். மேலும், இது போன்ற மற்ற வழக்குகளிலும், குழப்பத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு, விரைவில், சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு சார்பில், தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.