குரங்குகளுக்கும் குடும்பக் கட்டுப்பாடு

india03713aதமிழ்நாட்டின் பல பகுதிகளில் காணப்படும் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த அவற்றுக்கு கருத்தடை சிகிச்சை செய்யும் முயற்சி துவக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்குள் புகுந்து உணவுகளைத் திருடிச் செல்லும் குரங்குகள் தோட்டங்களை நாசம் செய்வதுடன் சில நேரங்களில் மனிதர்களையும் தாக்குகின்றன. குரங்குகள் கடிப்பதால் சொறி சிரங்கு முதல் காசநோய் வரை பலவித நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இப் பிரச்சனையை சமாளிக்க குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் சோதனை முறையில் இந்த திட்டம் சென்னையில் துவக்கப்பட்டது. இது வரை 190 ஆண் குரங்குகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவர் திருமுருகன் தெரிவித்தார்.

குடியிருப்புப் பகுதிகளில் துவம்சம் செய்யும் குரங்குகள் பிடிக்கப்பட்ட பிறகு, குரங்குக் கூட்டத்தில் உள்ள முதன்மையான ஆண் குரங்கு ( அல்பா மேல்) மற்றும் இனப் பெருக்கம் செய்யக் கூடிய பிற ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு ஒரு வார காலம் குரங்குகள் அண்ணை உயிரியல் பூங்காவில் வைத்துக் கண்காணிக்கப்படுகிறது. பிறகு அவை அவற்றின் கூட்டத்தில் பழையபடி கொண்டுவிடப்படுகின்றன. அறுவை சிகிச்சை மற்றும் உணவுக்காக ஒரு குரங்குக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை செலவாகிறது.

ஏற்கனவே தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யும் திட்டம் பல ஆண்டுகளாக அமலில் உள்ளது. ஆனால் இந்த திட்டம் போதுமான பலனைத் தரவில்லை – வெறி நாய்க்கடியை குறைக்கவில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். குரங்குகளைப் பொறுத்தவரை கருத்ததடை சிகிச்சையின் பலன்களை நீண்ட காலத்தில் தான் கணிக்க முடியும் என்கிறார் திருமுருகன். இந்த திட்டம் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் அவர் கூறினார்.

தமிழ் நாட்டில் பல்வேறுவகைக் குரங்குகள் இருந்தாலும், பரவலாகத் தென்படும் நாட்டுக் குரங்குகளே அதிகம் தொல்லை தருகின்றன. குரங்குகள் வேகமாக இனப்பெருக்கம் செய்யும் தன்மையுடையவை. -BBC

TAGS: