காவல்துறையில் பாலியல் தொல்லை: தமிழகத்தில் விசாரணைக் குழு

india04713aகாவல்துறையில் பணியாற்றும் பெண்கள் சந்திக்கின்ற பாலியல் தொல்லை தொடர்பான குற்றங்கள் குறித்து விசாரிக்கவென தமிழகத்தில் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இக்குழுவிற்கு தற்போது தமிழ்நாடு மின்சார வாரிய கண்காணிப்பு அதிகாரியாகப் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சீமா அகர்வால் தலைமை வகிப்பார் என தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி தெரிவித்திருக்கிறார்.

மேலும் மூன்று உயர் காவல்துறை அதிகாரிகளும் ஒரு பெண் வழக்கறிஞரும் இக்குழு உறுப்பினர்களாகப் பணியாற்றுவர் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

மாவட்டக் கண்காணிப்பாளர் முதல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பொறுப்பில் இருப்போர்வரை மீதான பாலியல் புகார்கள் குறித்து தனது தலைமையிலான குழு விசாரணை நடத்தும் என சீமா அகர்வால் கூறியுள்ளார்.

கண்காணிப்பாளருக்குக் கீழ்நிலையிலுள்ள அதிகாரிகள் மீது கொடுக்கப்படும் பாலியல் புகார்கள் பற்றி மாவட்ட கண்காணிப்பாளர்கள் தலைமையில் செயல்படும் குழுக்கள் விசாரிக்கும் என அவர் தெரிவித்தார்

விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகளின் பேரில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் அகர்வால் நம்பிக்கை தெரிவித்தார்

ஓய்வு பெற்ற காவல்துறை டைரக்டர் ஜெனரல் திலகவதி தான் பதவியிலிருந்தபோது பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தவிர்க்கவென பல்வேறு முன்முயற்சிகள் எடுத்ததாகவும் ஓரளவு அதில் தாம் வெற்றி கண்டதாகவும் நம்மிடம் கூறினார். ஆனால் பொதுவாக மேலதிகாரியை அனுசரித்துப்போனால்தான் இல்லற வாழ்க்கையினை சுமுகமாக நடத்தமுடியும் என்ற சூழலில் பெண் காவலர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேர்வதாகக் கூறுகிறார்.

பாதிக்கப்படும் பெண் காவலர்கள் புகாரை எழுத்துமூலமாக அளிக்கவே தயங்குகின்றனர் எனவும் சுட்டிக்காட்டுகிறார் திலகவதி.

அப்படிப்பட்ட சூழலில் பயிற்சி அளிக்கும்போது அனைத்து மட்டங்களிலும் பெண் நிலைகுறித்து விழிப்புணர்வும், பெண்களுக்கு அவர்கள் உரிமைகள் குறித்த சரியான புரிதலும் ஏற்படுத்தப்படவேண்டும். மேலும் புகார் விசாரணைக் குழுக்கள் பாதிக்கப்பட்டவர்கள் வந்து முறையிடுவதற்காகக் காத்திராமல் மாநிலம் முழுதும் சுற்றுப் பயணம் செய்து நேரடியாக விசாரித்து நிலையைத் தெரிந்து கொள்ளவேண்டும் எல்லாவற்றிற்கும் மேலாக சமூக மதிப்பீடுகள் மாறவேண்டும் என வலியுறுத்துகிறார் திலகவதி. -BBC

TAGS: