உணவுப் பாதுகாப்பு அவசர சட்டத்துக்கு இந்திய அரசு ஒப்புதல்

india04713bஇந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதியினருக்கு மானிய விலையில் உணவுப் பொருட்களை அளிக்க வழி செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 80 கோடி பேருக்கு மிகக் குறைந்த விலையில் மாதம் 5 கிலோ உணவுப் பொருட்கள் வழங்கப்படும்.

உணவுப் பொருட்களின் விலை கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாயில் இருந்து ஐந்து ரூபாய் வரை நிர்ணயிக்கப்படும்.

இந்த திட்டத்திற்காக ஆண்டுதோறும் 20 பில்லியன் டாலர்கள் வரை செலவாகும். உலகில் செயல்படுத்தப்படும் மிகப் பெரும் உணவுத் திட்டமாகவும் இது இருக்கும்.

வருமாண்டில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வாக்கு வங்கியை மனதில் கொண்டு அரசு இத்திட்டத்தை முன்னெடுப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில் இந்தியாவில் கடும் போஷாக்கின்மை நிலவுகிறது, பட்டினிச் சாவுகள் அவ்வப்போது இடம்பெறுகின்றன. இந்த சூழலில் இந்த திட்டம் மிகவும் அவசியமானது என்று இதை ஆதரிப்பவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இந்தியாவில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் பெருமானமுள்ள உணவுப் பொருட்கள் எலி கடித்தும், மழையில் நனைந்தும் நாசமாகின்றன.

இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் கே.வரதராஜன், 120 கோடி மக்களின் பிரச்சினையான உணவுப் பாதுகாப்பு குறித்த இந்த சட்டம் , அனைத்து கட்சிகளின் கலந்தாலோசனையுடன் நிறைவேற்றப்பட்டிருக்கவேண்டும். இது போல அவசர சட்டமாகப் பிறப்பிக்கப்பட்டிருக்கக்கூடாது என்றார்.

மேலும் இந்த சட்டத்தில் மேம்படுத்தப்படவேண்டிய பல பிரச்சினைகளை தாங்கள் சுட்டிக்காட்டியிருந்தாலும், அவை கணக்கிலெடுத்துக்கொள்ளப்படவில்லை. சில மாநிலங்களில் 35 கிலோ என்ற அளவுக்கு உணவுப் பொருட்கள் தரப்படுகின்றன. ஆனால் இந்த சட்டத்தின்படி ஐந்து கிலோ மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றார் வரதராஜன்.

ஆனால் இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இது சட்டமாக நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற சட்டவிதி உள்ளது. அப்போது என்ன நிலைப்பாட்டை இடது சாரிக் கட்சிகள் எடுக்கும் என்று கேட்டதற்கு பதிலளித்த அவர், தங்களது ஆலோசனைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டால் தவிர இதை ஆதரிக்கமாட்டோம் என்றார்.

இந்த அவசர சட்டம் குறித்து கருத்து தெரிவித்த பொருளாதார வல்லுநர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன், மத்திய அரசு தற்போது சுமார் 85,000 கோடி ரூபாய் வரை உணவு மான்யத்துக்கு செலவு செய்கிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாயிலிருந்து 1.50 லட்சம் கோடி ரூபாய் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து இந்த திட்டத்தை அமல் படுத்தவேண்டுமானால், இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலையில் வளரவேண்டும் என்றார் அவர்.

மேலும், இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு,இந்திய உணவுக் கார்ப்பொரேஷனுக்கு, கூடுதல் சேமிப்புக் கிடங்குகள் தேவைப்படும். தற்போது இந்திய உணவுக் கார்ப்பொரேஷன் தனது உணவுக் கொள்முதலில், 20 சதவீதத்தை மட்டுமே தனது சொந்த கிடங்குகளில் சேமிக்கிறது. மீதமுள்ள 80 சதவீதி உணவுப் பொருட்களை அது வாடகை கிடங்குகளிலோ அல்லது திறந்த வெளியிலோதா சேமிக்கிறது என்று சுட்டிக்காட்டினார் ஸ்ரீநிவாசன். -BBC

TAGS: