இந்தியாவில் உருவான யோகா கலை, மதசார்பின்மையை ஏற்படுத்துவதாக கலிபோர்னியாவை சேர்ந்த நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இது அமெரிக்காவில் உள்ள யோகா ஆர்வலர்களுக்கு மிகப் பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது.
அமெரிக்காவின் சில பள்ளிகளில் யோகா கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க கலாச்சார கொள்கைக்கு இது முற்றிலும் எதிரானது எனவும், யோகா ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்ற வலியுறுத்துவதாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கத்திய மதங்களை பரப்பும் விதமாக யோகா பயிற்றுவிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த எதிர்ப்பை தொடர்ந்து அமெரிக்காவில் பல பள்ளிகளிலும் யோகா பயிற்றுவிப்பது தடை செய்யப்பட்டது.
இருப்பினும் சில பள்ளிகளில் தொடர்ந்து யோகா கற்றுக் கொடுப்பது அமெரிக்க பெற்றோர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. யோகா பயிற்சியை நிறுத்தாததால் ஏராளமான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளியில் இருந்து நிறுத்தி விட்டனர். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கை அடுத்து தீர்ப்பிற்கு முன் சோதனை முறையாக சில வாரங்கள் கோர்ட் அறையிலேயே குழந்தைகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி, யோகா ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் முன்னிலையிலேயே நடத்தப்பட்டது.
இறுதியாக கலிபோர்னியாவைச் சேர்ந்த நீதிபதி ஜான் மேயர், யோகா பயிற்சி குறித்த தனது கருத்தை தெரிவித்தார். அதில் அவர் கூறியதாவது : இந்த யோகா பயிற்சி சான் டியாகோ மாகாணத்திற்கு அருகில் உள்ள பள்ளியிலேயே முதலில் கற்றுக் கொடுக்கப்பட்டது; ஆனால் இந்த யோகா பயிற்சி மதசார்பின்மையை ஏற்படுத்துவது சோதனையில் வெளிப்படையாக தெரிய வந்துள்ளது; மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் இந்த பயிற்சியை எதிர்க்க முடியாது; நானும் பிக்ராம் யோகா வகுப்புக்களில் கலந்து கொண்டுள்ளேன்; யோகா பயிற்சி முறைகளுக்கும், உடற்பயிற்சி முறைகளுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை; இணையதளங்களிலும் யோகா குறித்த முறைகளை விரிவாக விளக்கப்பட்டுள்ளது; விக்கிபீடியா உட்பட அனைத்திலும் ஆராய்ந்த வகையில் யோகா எவ்வித மதம் சார்ந்த விஷயங்களையும் பரப்பும் விதமாக இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிப்பதால் மதம் சார்ந்த அனைத்து அம்சங்களையும் நீக்க பள்ளி நிர்வாகங்கள் ஒத்துக் கொண்டுள்ளன. அதன்படி மதம் சார்ந்ததாக கருதப்படும் நமஸ்தே என்ற வார்த்தை, ஆசனங்களின் பெயர்களை குறிக்கும் சமஸ்கிருத வார்த்தைகளுக்கு பதிலாக ஆங்கில வார்த்தைகளே பயன்படுத்தப்படும் எனவும் உறுதி அளித்துள்ளன. உதாரணமாக பத்மாசனம் என்பது லோட்டஸ் போஸ் என ஆங்கிலத்தில் கூறப்படும் என தெரிவிக்கப்பட்டது.
யோகா தொடர்பான வழக்கு எதிர்ப்பாளர்களால் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் யோகா ஆதரவாளர்கள் தற்போது பெற்ற வெற்றியை கொண்டாடி வருவதுடன் யோகா பயிற்சிகளையும் பள்ளிகளில் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளனர். அமெரிக்காவில் யோகா பயிற்சி முறை நூறு ஆண்டுகளுக்கு மேலாக பரவி உள்ளது குறிப்பிடத்தக்கது.