தில்லியில் சென்ற வருடம் யுவதி ஒருவர் பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த இந்தியாவை உலுக்கிய சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த இளம்பிராய குற்றச் சந்தேகநபர் ஒருவர் மீது நடந்துவந்த வழக்கு முடிவடைந்துள்ளது.
இந்திய இளம்பிராயத்தார் நீதிவிசாரணை தீர்ப்பாயம் இவ்வழக்கில் தனது தீர்ப்பை ஜூலை 11ஆம் நாள் வழங்கும் என்று தெரிவித்துள்ளது.
ஆட்கடத்தல், பாலியல் வல்லுறவு, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்தப் பதினேழு வயது இளைஞன் மீது சுமத்தப்பட்டிருந்தது.
குற்றச்சாட்டப்பட்ட இளைஞன் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார்.
குற்றம் உறுதிசெய்யப்படுமானால் இவருக்கு அதிகபட்சமாக சீர்திருத்தப் பள்ளி ஒன்றில் மூன்று ஆண்டுகள் வரையான தடுப்புக்காவல் தண்டனையை இந்திய சட்டங்களின் கீழ் வழங்கமுடியும்.
கொடூரமான முறையில் மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, தாக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் அவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவெங்கும் காட்டமான உணர்வலை பரவச்செய்திருந்தது.
இந்த சம்பவத்தில் வேறு நான்கு ஆண்கள் மீதும் வழக்கு நடந்துவருகிறது. -BBC