தர்மசாலா, திபெத்தியர்களின் ஆன்மிக குருவாக கருதப்படுபவர் தலாய் லாமா.
6-7-1935 அன்று திபெத்தில் பிறந்த இவரை 13வது தலாய்லாமா துப்டன் கியாட்சோவின் மறுபிறவியாக கருதிய புத்த துறவிகள் இவரது 2-வது வயதிலேயே தங்களின் அடுத்த மதத் தலைவராக தேர்வு செய்தனர்.
சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து திபெத்தை விடுவித்து தனி நாடாக உருவாக்க வேண்டும் என சீன அரசுக்கு எதிராக 1959ம் ஆண்டு பெரும் போராட்டத்தை தலாய் லாமா நடத்தினார்.
இந்த போராட்டம் தோல்வியடைந்ததையடுத்து இந்தியாவில் அரசியல் தஞ்சமடைந்த அவர் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் மடத்தை நிறுவி இங்கிருந்தபடியே ‘தனி திபெத்’ என்ற போராட்டத்தை வழி நடத்தி வருகிறார்.
தாய்நாட்டின் விடுதலைக்காக அகிம்சை பாதையில் போராடிவரும் தலாய் லாமாவின் தொண்டினை பாராட்டி 1989ம் ஆண்டு அமைதிக்கான நோபல் விருது வழங்கப்பட்டது.
தலாய் லாமாவின் தொண்டர்களாக திபெத்திய விடுதலைக்காக போராடும் ஆயிரக்கணக்கான புத்த துறவிகள் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள பைலாகுப்பி போன்ற பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தலாய் லாமாவின் 78வது பிறந்த நாளை அவரது தொண்டர்கள் இன்று கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
தர்மசாலாவில் உள்ள தலாய்லாமாவின் தலைமை மடம் மற்றும் பைலாகுப்பியில் உள்ள கிளை மடம் ஆகியவற்றின் முன்னே இன்று காலை கூடிய ஆயிரக்கணக்கான புத்த துறவிகள் தங்களின் தலைவர் பூரண உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ விசேஷ வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.