என்.எல்.சி., பங்குகளை தமிழக அரசு வாங்க ‘செபி’ அமைப்பு ஒப்புதல்

india08713cபுதுடில்லி:நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான, என்.எல்.சி.,யின் பங்குகளை, தமிழக அரசு வாங்க, இந்தியப் பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான, “செபி’ ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், என்.எல்.சி., பங்குகள் விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம், விரைவில் முடிவுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

என்.எல்.சி.,யின், 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு, தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை எழுதினார். அதில், என்.எல்.சி.,யின் பங்குகளை, தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு விற்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.இந்த வேண்டுகோளுக்கு, முதலில் மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. அதன்பின், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் பதில் அளித்தார்.

அப்போது கூறியதாவது:என்.எல்.சி., பங்குகள் விற்பனை தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள வேண்டுகோள் குறித்து பரிசீலிக்கப்படும். இது தொடர்பாக, பங்கு வெளியீட்டுத் துறை மற்றும் இந்தியப் பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான, “செபி’ உடன் ஆலோசனை நடத்தப்படும்.செபியின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு வருகிறதா என்பதை ஆலோசித்த பின், தமிழக அரசுக்கு, பங்குகளை விற்பது குறித்து பரிசீலிக்கப்படும். செபியின் விதிகளுக்கு உட்பட்டே, என்.எல்.சி.,யின் பங்குகளில்,5 சதவீதம் விற்கப்படுகிறது.இவ்வாறு, அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

இதையடுத்து, பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம், செபியின் கருத்துக்களைப் பெறுவதற்காக, அனுப்பி வைக்கப்பட்டது. அந்த கடிதத்தைப் பரிசீலித்த செபி, “பங்குகளை வாங்குவது தொடர்பாக, உறுதியான திட்ட முன்மொழிவுகளை அனுப்பி வையுங்கள். மேலும், தமிழகத்தில் உள்ள எந்தெந்த பொதுத் துறை நிறுவனங்கள், என்.எல்.சி.,யின் பங்குகளை வாங்க உள்ளன என்பதையும் தெரிவிக்க வேண்டும்’ என, கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:என்.எல்.சி., நிறுவனத்தின், 5 சதவீத பங்குகளை, தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் வாங்க, செபி அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

இருந்தாலும், இதுதொடர்பான விரிவான விவரங்களைப் பெறவும், திட்ட முன்மொழிவுகளைத் தயாரிக்கவும், தமிழக அரசு, மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் மற்றும் பொதுத் துறை பங்குகள் விற்பனைத் துறை போன்றவற்றுடன் ஆலோசனை நடத்தப்படும்.

இன்ஸ்டிடியூசனல் பிளேஸ்மென்ட் புரோகிராம் என்ற முறையில், தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு, என்.எல்.சி.,யின் பங்குகளை விற்கலாம் என, மத்திய அரசின் பொதுத் துறை பங்குகள் விற்பனை துறைக்கு, செபி தெரிவித்து விட்டது.

ஆனாலும், பங்குகளை வாங்கும் நிறுவனங்கள், செபி அமைப்பில் பதிவு செய்திருக்க வேண்டும் என, கூறியுள்ளது.அதனால், இந்தப் பிரச்னை தொடர்பாக விவாதிக்க, மூத்த அதிகாரி ஒருவரை நியமிக்கும்படி, தமிழக அரசை, மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டு உள்ளது.இவ்வாறு, மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

என்.எல்.சி., நிறுவன பங்குகளை, தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் வாங்க, செபி அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதால், பங்குகள் விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, என்.எல்.சி., தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

TAGS: