இந்தியாவில், பௌத்தர்களின் புனித தலமான புத்தகயாவில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்து இந்திய மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.
பிஹார் மாநிலத்தில் புத்தகயாவை அண்டி வரிசையாக ஒன்பது இடங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 2 பேர் காயமடைந்தனர்.
இவற்றை பயங்கரவாதத் தாக்குதல்கள் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால் எந்த இயக்கமும் தாக்குதலுக்கு இதுவரை உரிமை கோரவில்லை.
‘கயா மாவட்டத்தில் பாராச்சாட்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பிடிபட்டுள்ளார். அவரிடம் விசாரித்துவருகிறோம்’ என்று காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இரண்டுபேர் வெடிகுண்டுகளை பொருத்திய காட்சிகள் விகாரை வளாகத்தில் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன.
4 குண்டுகள் புத்தகயா விகாரை கட்டிடத்துக்குள்ளேயே வெடித்துள்ளன. 3 குண்டுகள் அருகே உள்ள மற்ற மடாலயங்களில் வெடித்தன. ஒரு குண்டு புத்தர் சிலையொன்றின் அருகிலும் இன்னொன்று பஸ் நிலையத்திலும் வெடித்துள்ளன.
வெடிமருந்துகள் நிரம்பிய சிறிய சிலிண்டர் குடுவையொன்று புத்தகயா போதி மரத்துக்கு அடியில் கிடந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. போதி மரத்துக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லையென்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து டெல்லி, சென்னை உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களிலும் பெளத்த வழிபாட்டுத் தலங்கள் உள்ள இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உலகெங்கிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்டு தோறும் சென்றுவழிபடும் புத்தகயா யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. -BBC