தர்மபுரியில் 144 தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: ஐகோர்ட்டில் திருமாவளவன் மனு

india09713cதர்மபுரியில் இளவசரன் மரணத்தை தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் மூலம் அரசியல் கட்சியினர் ஊர்வலம் மற்றும் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் அங்கு செல்லவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் சார்பில் அவரது வக்கீல் பிரபாகரன் ஐகோர்ட்டில் இன்று தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அகவர்வால், நீதிபதி சத்திய நாராயணன் ஆகியோர் முன்பு ஆஜராகி தர்மபுரியில் அரசு பிறப்பித்திருந்த 144 தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று முறையிட்டார்.

இதுபோன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதால் அரசியல் கட்சி தலைவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே தடை உத்தரவை நீக்க வேண்டும். இளவசரன் இறுதி சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வாதாடினார்.

மேலும் இளவசரனின் பிரேத பரிசோதனை உள்பட அனைத்து விசாரணைகளும் தமிழகத்தின் முன்னாள் தடைய அறிவியல் துறை தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் கூறும்போது, இந்த கோரிக்கையை சம்மந்தப்பட்ட நீதிபதி முன்பு வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து வக்கீல் பிரபாகரன், நீதிபதிகள் தனபாலன், செல்வம் ஆகியோர் முன்னிலையில் ஆஜராகி தனது முறையீட்டை முன்வைத்தார். இந்த விசாரணை பிற்பகல் ஏற்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு வாதத்தின்போது திருமாவளவன் ஐகோர்ட்டுக்கு வந்திருந்தார்.

TAGS: