கோவை: கோவை நகரிலுள்ள பூங்காக்களை மேம்படுத்தவும், நகரம் முழுவதும் மரங்களை வளர்க்கவும் மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ள புதிய முயற்சி, வெற்றியடைந்தால், இன்னும் பத்தாண்டுகளில் தமிழகத்தின் முதல் பசுமை நகரமாக கோவை மாறும் வாய்ப்புள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், கோவை நகரில் பல்வேறு வளர்ச்சிப்பணிகளுக்காக ஏராளமான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன் அவற்றுக்கு மாற்றாக, மரங்களை வைக்க வேண்டும்; பூங்காக்களை மேம்படுத்த வேண்டுமென்ற மக்களின் ஏக்கம், ஏமாற்றமாகவே இருந்து வந்தது.
இந்நிலையில்தான், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு கோவை மேயர் சென்று வந்தபின் அவரிடம் அற்புதமான மனமாற்றம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கோவை நகரை பசுமையான நகரமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக களமிறங்கியுள்ளது.
முதற்கட்டமாக,பூங்காக்களை மேம்படுத்துவது, நகரம் முழுவதும் மரம் வளர்ப்பது பற்றிய ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது; கலெக்டர் கருணாகரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், கோவை மேயர் செ.ம.வேலுசாமி பேசியதாவது: மக்கள் தொகை பெருக்கம், வாகன எண்ணிக்கை அதிகரிப்பால் காற்றில் கார்பன் அளவு அதிகரித்து வருகிறது; இதற்கு மரம் வளர்ப்பு மட்டுமே ஒரே தீர்வாகும்.
மரம் வளர்ப்பது, மழை நீரை சேமிப்பது மட்டுமே வருங்கால சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லும் மிகப்பெரிய சொத்து என்பதை அனைவரும் உணர வேண்டும்.
ரோட்டோரத்தில் மரம் நட்டி சென்றதும், வீட்டிற்கு இடையூறாக வளர்ந்து விடும் என மக்களே வெட்டுகின்றனர். மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்காகவும் மரங்களை வெட்ட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
அதனால், மின்பாதை இல்லாத பகுதி, மாநகராட்சி திட்டப்பணிகள், ரோடு பணிகளுக்கு இடையூறு இல்லாத இடங்களை தேர்வு செய்து மரங்கள் வளர்க்க வேண்டும்.
மரம் வளர்க்கும் திட்டத்துக்கு, மாநகராட்சி நிர்வாகத்துடன் தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் இணைந்து உயிர் கொடுக்க வேண்டும்.
பூங்காக்களை மேம்படுத்தவும், மரம் வளர்க்கவும், நெடுஞ்சாலைத்துறை ரோடுகளில் உள்ள “சென்டர் மீடியன்’களை மாநகராட்சி வசம் எடுத்துக் கொண்டு, பசுமையாக்கவும் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைச் செயல்படுத்த, எல்லோருடைய ஒத்துழைப்பும் அவசியம்.
எந்த இடத்தில், எந்த மரத்தை வளர்க்க வேண்டும் என்று திட்டமிட வேண்டும். இத்திட்டத்தை பெயரளவில் செயல்படுத்தாமல், ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். சிங்கப்பூரில் எங்கு பார்த்தாலும் பசுமையாக உள்ளது; போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மரங்கள் வளர்த்துள்ளனர்.
கோவையில் தேவையான அளவுக்கு நிலமுண்டு; மரமில்லை. பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் உள்ள திறந்தவெளி இடம் மற்றும் ரோட்டோரம் என மரம் வளர்க்க தகுதியான அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பழைய மாநகராட்சிப் பகுதியில் 165 பூங்காக்களும், விரிவாக்கப்பகுதிகளில் 33 பூங்காக்களும் பராமரிக்கப்படுகின்றன. ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பூங்காக்கள், பராமரிப்பின்றி அசுத்தமாகவும், ஆக்கிரமிப்பிலும் உள்ளன. அவற்றை மீட்டு, மேம்படுத்த வேண்டும்.
மாநகராட்சியால் இத்திட்டத்தை தனித்து செயல்படுத்த முடியாது. தன்னார்வ அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாணவர்கள், மக்கள் இணைந்து செயல்பட வேண்டும். முதற்கட்டமாக 65 பூங்காக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன் முக்கிய ரோடுகளில் 50 கி.மீ., தொலைவுக்கு சென்டர் மீடியனில் பூங்கா அமைக்கும் திட்டம் உள்ளது.
ஆக்கிரமிப்பிலுள்ள பூங்காக்களை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; வேறெங்கும், பூங்காக்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் மாநகராட்சி நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தவும். கோவைக்கு நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற சமூக அக்கறை, எல்லோரிடமும் மேலோங்கியுள்ளது.
கூலித்தொழிலாளர்கள், தொழிலதிபர்கள் என்ற பாரபட்சமின்றி, பெரியகுளத்தில் கரசேவை செய்தது மிகப்பெரிய முன்னுதாரணம். அதேபோல, ஒரு குடும்பமாக இணைந்து, இந்த நகரத்தை பசுமை நகரமாக மாற்ற நாம் எல்லோரும் உறுதி ஏற்போம். இவ்வாறு, கோவை மேயர் பேசினார்.
மாநகராட்சி கமிஷனர் லதா, துணை கமிஷனர் சிவராசு, மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், தன்னார்வ அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக, பல்வேறு அமைப்பினரும் உறுதி அளித்தனர். மேயர் கூறியபடி, எல்லோரும் ஒரு குடும்பம் என்கிற உணர்வோடு செயல்பட்டு, மரம் வளர்க்கவும், பூங்காக்களை மேம்படுத்தவும் அனைவரும் கைகோர்த்தால், கோவை நகரம், பத்தாண்டுகளில் தமிழகத்தின் முதல்”கிரீன் சிட்டி’யாக மாறுவது நிச்சயம்.