அனைத்து கட்சியிலும் ஊழல்: 86% இந்தியர்கள் நம்புவதாக ஆய்வில் தகவல்

india10713cலண்டன் : அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழல் நிறைந்தவை தான் என 86 சதவீதம் இந்தியர்கள் நம்புவதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் அம்பலமாகி உள்ளது. ஊழலின் அளவு குறித்தும், நாடுகளின் அரசியல் கட்சிகள் பற்றிய மக்களின் நிலைப்பாடு குறித்தும் சர்வதேச அளவில் ஆய்வு நடத்தப்பட்டது.

“சர்வதேச ஊழல் அளவீடு 2013” என்ற தலைப்பில் உலகம் முழுவதிலும் உள்ள 107 நாடுகளில் 114,270 மக்களிடம் ஒரு வெளிப்படையான ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது.

இதில் உலக நாடுகளின் சராசரி ஊழல் அளவான 53 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் ஊழலில் அளவு அதிகரித்துள்ளதாக 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நம்புவது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமின்றி நாடு முழுவதும் பொது மக்களின் நலன் குறைவாகவே உள்ளது எனவும், ஊழல் தொடர்பான பிரச்னைகளை அரசு தொடர்கதையாக்கிக் கொண்டுள்ளது எனவும் ஆசிய பசிபிக் பிராந்திய மேனேஜர் ருக்ஷனா நானாயக்கரா தெரிவித்துள்ளார்.

மேலும் 68 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள், ஊழல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு எதிராக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவே நம்புவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவை வல்லரசாக்குவோம் என கூறுபவர்கள் மக்களின் நலனில் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை எனவும் ருக்ஷனா தெரிவித்துள்ளார்.

பொது பணித்துறை மற்றும் சேவை துறை போன்ற அரசுத்துறைகளில் பணியாற்றுபவர்களில் இரண்டில் ஒருவர், அதாவது 54 சதவீதம் பேர் கடந்த 12 மாதங்களில் அதிகளவில் லஞ்சம் வாங்குபவர்களாக உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் ஆய்வில் வெளியாகி உள்ளது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இதிலும் இந்தியா தான் முதலிடம். உலக நாடுகளில் 27 சதவீதம் அரசுத்துறை பணியாளர்களே லஞ்சம் வாங்குகின்றனர். உலக அளவில் போலீஸ், நீதித்துறையை தொடர்ந்து அரசியல் கட்சிகளே அதிக லஞ்சம் புழங்கும் மையமாக உள்ளன.

இந்தியாவில் 86 சதவீதம் மக்கள் அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழலில் ஈடுபடுவதாக நம்புகின்றனர். காவல் துறையில் 62 சதவீதமும், கல்வி நிறுவனங்களில் 48 சதவீதமும், நிலம் தொடர்பான கொடுக்கல் வாங்கலில் 38 சதவீதமும், இந்தியாவின் நீதித்துறையில் 36 சதவீதமும் லஞ்சம் உள்ளது. ஊழல் என்பது பொது மக்களிடம் இருந்து தான் துவங்குவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமைகளை பெறுவதற்காகவே அதிகளவில் லஞ்சம் கொடுக்கப்படுகிறது. சுகாதாரம், பசி, கல்வி நுழைவு கட்டணம் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக கூடுதல் லஞ்சம் கொடுக்கப்படுகிறது.

உலக அளவில் 28 சதவீதம் ஆண்களும், 25 சதவீதம் பெண்களும் லஞ்சம் அளித்து வருகின்றனர். நோபாள், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்களை விட மிக அதிக அளவில் ஆண்கள் லஞ்சம் அளித்து வருகின்றனர்.

இதற்காகு மாறாக கொலம்பியாவில் 27 சதவீதம் பெண்களும், 16 சதவீதம் ஆண்களும் லஞ்சம் அளிக்கின்றனர். ஐரோப்பாவில் தகவல் தொடர்பு மற்றம் அரசியல் கட்சிகளே அதிகளவில் லஞ்சம் பெறுகின்றனர். 5 சதவீதம் மக்கள் லஞ்சம் அளித்து வருகின்றனர்.

TAGS: