சீதைக்கு இலங்கையில் கோயில் : மத்தியப் பிரதேச அரசின் திட்டம்

india11713aஇலங்கையில் நுவரெலியா அருகே ராமாயண நாயகி சீதைக்கு ராமன் அக்கினி பரீட்சை செய்த்தாகக் கூறப்படும் இடம் இருப்பதாகவும், அந்த இடத்தில் சீதைக்கு ஒரு கோவில் கட்ட மத்தியப் பிரதேச அரசு முடிவு செய்து, இலங்கை அரசின் அனுமதியைப் பெற்றிருப்பதாகவும் செய்திகள் வந்தன.

இந்தக் கோவிலுக்கான திட்ட வரைபடம் கூட தயாராகிவிட்டதாக இன்று பத்திரிகை செய்தி ஒன்று கூறுகிறது

இதற்கான அனுமதி வழங்கப்பட்டுவிட்டதா என்று தெளிவாகத் தெரியாத நிலையில், இது போன்ற ராமாயணத்துடன் தொடர்புள்ளதாகக் கூறப்படும் இலங்கையின் சில இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்த இலங்கையின் சுற்றுலாத்துறை சில ஆண்டுகளுக்கு முன்னர் சில நடவடிக்கைகளை எடுத்தது.

இந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவிருந்த , இலங்கை உல்லாசப் பயணத்துறையின் ஓய்வு பெற்ற பணிப்பாளர் நாயகம் ஸ்ரீநிவாசன் கலைச்செல்வம் கருத்து தெரிவிக்கையில், இது போன்ற ராமாயணத்துடன் தொடர்புள்ளதாகக் கருதப்படும் பல இடங்கள் இலங்கை அரசின் சுற்றுலாத்துறையால், இந்தியாவில் பிரபலப்படுத்த முயற்சிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்டன. இதன் பலனாக இந்தியாவிலிருந்து இந்த இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது என்றார்.

ராவணன் சிவபெருமானை வழிபட்டதாகக் கருதப்படும் திருகோனேஸ்வரன் கோயில், சீதை சிறை வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படும் இடம், ஹனுமான் சஞ்சீவி பர்வதத்திலிருந்து, போரில் காயம் பட்ட லக்ஷமணனைக் காப்பாற்ற மூலிகைகளை கொண்டு வந்தபோது , இலங்கையின் ஐந்து இடங்களில் அந்த மூலிகைச் செடிகள் சிந்தியதாகக் கருதப்படும் இடங்கள் ஆகியவை இது போல சுற்றுலாத்துறையால் பிரபலப்படுத்தப்பட்டன என்றார் அவர்.

இலங்கை அரசு ராமகாதையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இடங்களை இவ்வாறு சுற்றுலாப் பயணிகளைக் கவர பயன்படுத்தும் நிலையில், இலங்கையில் ராமர் மற்றும் சீதை வழிபாடு குறித்து சமூகத்தில் இருக்கும் நிலை குறித்து இலங்கையின் யாழ்ப்பாண மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களில் வரலாற்றுத்துறையின் பேராசிரியராகப் பணியாற்றியவரும். தற்போது கிழக்குப் பல்கலைகழகத்தில் வரலாற்றுத்துறையை நிறுவிக்கொண்டிருப்பவருமான, பேராசிரியர் பத்மநாதன், குறிப்பிடுகையில், பொதுவாக இலங்கையில் ராமர் சீதை வழிபாடு என்பது தமிழர்கள் மத்தியில் வரலாற்று ரீதியில் பெரிய அளவில் இல்லை. பொளத்த சமூகத்திலும் இது இல்லை என்றார். -BBC

TAGS: