கூடங்குளத்தில் மின் உற்பத்திக்கான முதல் கட்ட அனுமதி

india12713aதமிழகத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் இதற்கான அனுமதியை வியாழக்கிழமை வழங்கியது.

இதையடுத்து அங்கு விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என்கிற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

தற்போது இந்த அனுமதி கிடைத்துள்ள நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து இன்னும் 45 நாட்களுக்குள் மின் உற்பத்தியை தொடங்கக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக அதன் இயக்குநர் ஆர் எஸ் சுந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பாக உச்சநீதிமன்றம் விதித்த சில உத்தரவுகளை நிறைவேற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளன என்று இந்திய அணுமின் ஒழுங்குமுறை ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளது.

ரஷ்ய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய வல்லமை கொண்ட இரண்டு அணு உலைகள் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் முதலாவது அணு உலை செயல்படவே இப்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் மின் உற்பத்தி தொடங்குவதற்கு முன்னர் அங்கு மேலும் பல சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டியத் தேவை உள்ளது என்றும் கூடங்குள அணுமின் நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடரவே செய்கின்றன. -BBC

TAGS: