இந்தியாவிலிருந்து இலங்கை வழியாக சீனா, மலேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த பெருமளவிலான உலரவைக்கப்பட்ட கடல் பல்லிகள் தமிழக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மீனவர்களால் பிடிக்கக் கூடாது என்று தடைசெய்யப்பட்ட இந்த கடல்பல்லிகளின் சர்வதேச சந்தை மதிப்பு பல லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.
சீன பாரம்பரிய மருத்துவத்தில் ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் ஒன்றாக இந்த கடல்பல்லிகள் பயன்படுத்தப்படுவதாகவும், அதற்காகவே இவை சட்டவிரோதமாக இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் தமிழக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
இந்த கடல்பல்லிகள், இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட கடல்வாழ் உயிரினமாக இருந்தாலும், இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளில் இவற்றின் ஏற்றுமதிக்கு தடை இல்லை என்பதால், தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டு அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் சட்டரீதியாக ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் தமிழக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக மீனவர்களிடமிருந்து ஒரு கிலோ உலரவைக்கப்பட்ட கடல்பல்லிகள் சுமார் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் ரூபாய்க்கு வாங்கப்படுவதாகவும், இங்கிருந்து இவை இலங்கைக்கு சென்றபிறகு அதன் மதிப்பு ஒரு கிலோவுக்கு பதினைந்தாயிரம் முதல் இருபதாயிரம் ரூபாயாக அதிகரிப்பதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இந்த கடல்பல்லிகள், கடற்சூழலியலில் முக்கியமானதொரு பங்காற்றுவதால் அவற்றை பாதுகாக்கவேண்டியது அவசியம் என்கிறார் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டுவரும் கடல்வாழ் உயிரியல் வல்லுநர் டாக்டர் தீபக் சாமுவேல் அவர்கள். -BBC
கடல் பல்லிகளுக்கு பதிலாக கிரின் பைப் மீன் படம் பதிவு செய்யப்பட்டுள்ளது.