குஜராத் கலவர விஷயத்தில் நான் தவறு செய்யவில்லை : நரேந்திர மோடி

india13713cஆமதாபாத் : “”குஜராத்தில், 2002ல், நடந்த கலவரத்தின்போது, நான் செய்ததெல்லாம், சரியானது தான். சுப்ரீம் கோர்ட் அமைத்த, சிறப்பு புலனாய்வு குழு, இந்த விவகாரத்தில், என்னை குற்றமற்றவன் என, அறிவித்துள்ளது,” என, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, கலவரம் உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பாக, பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

குஜராத்தில், 2002ல், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, பெரும் கலவரம் வெடித்தது. ஏராளமான சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, அம்மாநில முதல்வர், நரேந்திர மோடிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து, புகார் கூறி வருகின்றன.

தற்போது அவர், பா.ஜ.,வின் பிரசார குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள, லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ., பிரதமர் வேட்பாளராகவும், அவர் அறிவிக்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகித்த, ஐக்கிய ஜனதா தளம், அந்த கூட்டணியிலிருந்து வெளியேறியது.

இந்நிலையில், “குஜராத்தில் நடந்த கலவரம், நரேந்திர மோடி, பிரதமராவதற்கு தடையாக இருக்குமா’ என்ற ரீதியில், அரசியல் வட்டாரத்தில் பேச்சு உள்ளது.இது தொடர்பாக, இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல், மவுனம் காத்து வந்த நரேந்திர மோடி, தற்போது முதல் முறையாக, இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு, நேற்று, அவர் அளித்துள்ள பேட்டி:குஜராத்தில் நடந்த கலவரம் குறித்து, தொடர்ந்து என் மீது புகார்கள் கூறப்படுகின்றன. ஒரு தவறு செய்திருந்து அல்லது திருடியிருந்து, அதற்காக கையும், களவுமாக பிடிபட்டால், கவலைப்பட வேண்டும். என்னுடைய விஷயம் அப்படிப்பட்டதல்ல.

குஜராத்தில், 2002ல், நடந்த கலவரத்தின்போது, நான் செய்ததெல்லாம் சரியானது தான். இந்த கலவரம் தொடர்பாக விசாரிப்பதற்காக, சுப்ரீம் கோர்ட் சார்பில், சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, என்னை குற்றமற்றவன் என, அறிவித்துள்ளது. இதை, யாரும் நினைவுபடுத்தி பார்ப்பது இல்லை.

TAGS: