எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் போதும்; லஞ்ச நபர் மீது நடவடிக்கை!

india14713cசென்னை: லஞ்சம், ஊழல் குறித்து, மொபைல் போன், கணினி மூலம், பொதுமக்கள், எஸ்.எம்.எஸ்., புகைப்படம், வீடியோக்களை அனுப்பும், “விஜ்-ஐ’ (விஜிலென்ஸ் ஐ) திட்டத்தை, மத்திய கண்காணிப்பு ஆணையம், தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது.

லஞ்சம், ஊழல் குறித்து கடிதம் மூலம் புகார் அனுப்புவதில், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, மொபைல் போன், கணினி மூலம், எஸ்.எம்.எஸ்., போட்டோ, வீடியோ ஆதாரங்களையும் அனுப்பும் வகையில், “விஜ் – ஐ’ என்ற புதிய திட்டத்தை, மத்திய கண்காணிப்பு ஆணையம், கொண்டு வந்துள்ளது.

வடமாநிலங்களில் இது நடைமுறையில் இருந்தாலும், தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்நிலையில், ஊழலுக்கு எதிரான, ஐந்தாவது தூண், மெட், எம் ஜங்ஷன் அமைப்புக்களுடன் இணைந்து, மத்திய கண்காணிப்பு ஆணையம், தமிழகத்தில், “விஜ்-ஐ’ திட்டத்தை, நேற்று முன்தினம் அறிமுகம் செய்தது.

சென்னை, தி.நகர், சர்.பி.டி.தியாகராயா அரங்கில், திட்டத்தை அறிமுகம் செய்து, மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் ஸ்ரீகுமார் பேசியதாவது: ஊழல் பற்றி, எல்லா இடங்களிலும் பேச்சு நடக்கிறது. இரண்டு, மூன்று ஆண்டாக ஊழலை ஒழிப்பது குறித்தும் பேச்சு நடப்பது மிக நல்லது.

ஊழலை ஒழிக்க, “விஜ்-ஐ’ பயன்படும். இதற்கு, 92231 74440 அல்லது, 51964 என்ற எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், மொபைல் போனுக்கு, விஜ்-ஐ மென்பொருள் அனுப்பப்படும். அதை பதிவு செய்தால், யூசர் நேம், ஐ.டி., கிடைக்கும். மொபைல் போன், கணினி மூலம், லஞ்சம், ஊழல் குறித்த, எஸ்.எம்.எஸ்., புகைப்பட, வீடியோ ஆதாரங்களையும் அனுப்பலாம்.

இது, ஆவணமாக்கப்பட்டு, உடனடி விசாரணை துவங்கும். நம்பிக்கையோடு அனுப்புங்கள். ஊழலை ஒழிக்க, இளைஞர்கள் மட்டுமின்றி, எல்லா தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் கோபால்சாமி பேசியதாவது: நாட்டில், நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை இல்லை. பணம் சம்பாதிக்கும் அதிகாரிகளை தான், “நல்லவர்’ என்று கருதும் போக்கு காணப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில், அரசுப் பணியில் உள்ள, ஐ.ஏ.எஸ்., கணவனும், மனைவியும், 320 கோடி ரூபாய் சொத்து சேர்த்தது தெரிந்து, ஐந்து மாதங்களாகியும், வழக்கு கூட பதியவில்லை.

அரசுகள், ஊழலை ஒழிக்கும் என, நினைத்தால் முட்டாள்தனம். நாம் நினைத்தால் முடியும்; அதற்கு இளைஞர்கள் முன் வர வேண்டும். இதற்கு, ஆர்.டி.ஐ., சட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு, அவர் பேசினார்.

ஊழல் எதிர்ப்பு இயக்க துணைத் தலைவர் அரசு பேசுகையில், “”முன்னேற்றத் திட்டங்களை ஒதுக்கி வைத்து, ஊழல் ஒழிப்பை முக்கியப்படுத்த வேண்டும்.”விஜ்-ஐ’ என்ற ஆயுதம், இளைஞர்களிடம் தரப்பட்டுள்ளது.

எல்லா நிலைகளிலும், வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர வேண்டும். “யூத் விங்’ தேர்தல் நேரத்தில், “யூத் இங்க்’ ஆக மாறி, நல்ல ஆட்சியாளர்களை உருவாக்கினால், ஊழல் ஒழியும். மாநில விஜிலென்ஸ் பிரிவிலும் இந்த நடைமுறை வேண்டும்,” என்றார்.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவசகாயம் பேசுகையில், “”ஊழல், லஞ்சம் மட்டும் தான் வெளிப்படையாக, திறமையாக நடக்கிறது.

பல இடங்களில், இந்தப் பணிக்கு இவ்வளவு லஞ்சம் என, பட்டியல் போட்டு வசூலிக்கின்றனர். “விஜ்-ஐ ‘யில் புகார் கொடுத்தாலும், ஊழல் குறையாது.

பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான, பெரிய அளவிலான ஊழல்களை ஒழிக்க வேண்டும்,” என்றார். முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் விட்டல், “ஐந்தாவது தூண்’ தலைவர் விஜய் ஆனந்த், “யூத் விங்’ ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ராமநாதன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

TAGS: