பாரதீய ஜனதா பிரசாரக்குழு தலைவர் நரேந்திரமோடி, மராட்டிய மாநிலம், புனே நகரில் உள்ள பிரசித்தி பெற்ற பெர்குஸ்சான் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் நேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நமது மக்கள் தொகையில் 65 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான். இது நமக்கு மிகுந்த பலம் ஆகும். இளைய தலைமுறையினர் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும், உலகின் வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்ய முடியும்.
நான் இங்கே அரசியல் ஆதாயம் அடைவதற்காக வரவில்லை. அனைவருமே 21-ம் நூற்றாண்டு குறித்து பேசுகிறார்கள். ஆனால் யாருமே இந்தியாவை 21-ம் நூற்றாண்டு நாடாக உருவாக்குவதற்காக உழைக்கவில்லை. எல்லாப்பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கிறது. நமக்குத்தேவை மன உறுதிதான். இந்த தேசத்தினை வடிவமைப்பதில் மனித வள முன்னேற்றம்தான் முதல் தேவையாக உள்ளது.
சிறிய நாடான தென்கொரியா கூட ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி இருக்கிறது. அதில் புகழ் பெற்றிருக்கிறது. ஆனால் 120 கோடி மக்களை கொண்ட இந்த நாட்டில், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நாட்டை ஏலம் விட்டு விட்டோம். காமன்வெல்த் போட்டி ஊழல், நமது நாட்டின் புகழை சீர்குலைத்து விட்டது.
ஒலிம்பிக் போட்டியின்போது, இவ்வளவு பெரிய நாட்டில் பதக்கங்களை வெல்ல முடியவில்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள். நாம் விளையாட்டை நமது கல்விமுறையில் இணைத்திருக்கிறோமா?
நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் ஆராய்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. நமது பாதுகாப்புக்கு தேவையான ராணுவ தளவாடங்களை நாம் தயாரிக்க வேண்டும். விவசாயத்துறையை காப்பாற்றுவதற்கு புதிய முறைகளை புகுத்த வேண்டும். மாணவர்களை நாட்டு முன்னேற்றத்துக்கான ஆராய்ச்சிப்பணிக்கு இந்தியா பயன்படுத்தவில்லை என்பது துரதிர்ஷ்டவசமான ஒன்று. இந்த நாட்டில் உள்ள இளைய தலைமுறையினரின் ஆற்றலை நாட்டின் வடிவமைப்புடன் நாம் தொடர்புப்படுத்த வேண்டும்.
மற்றவர்களுக்கும் (காங்கிரஸ் கட்சியினர்), நமக்கும் (பாரதீய ஜனதா கட்சியினர்) மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. மற்றவர்கள் ஆட்சி அதிகாரத்தில் நாட்டம் கொண்டுள்ளனர். ஆனால் நாங்கள் அதிகாரம் வழங்கலில் நம்பிக்கை வைத்துள்ளோம். நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் அதிகாரம் வழங்குவதில் விருப்பம் கொண்டிருக்கிறோம்.
மத்தியில் அமைந்துள்ள அரசு, உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துவிட்டாலே, உங்கள் தட்டுகளில் உணவு வந்துவிடும் என நினைக்கிறது.
நாடு சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளில் கொண்டு வர முடியாத முன்னேற்றத்தை, குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளில் கொண்டு வந்து விட்டோம். இந்தியாவில் தயாராகிற மருந்துகளில் 45 சதவீதம் குஜராத்தில் உற்பத்தியாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.