இந்தியாவில் உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பெரும் மழைவௌ்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி காணாமல்போயிருந்த 5700க்கும் அதிகமானவர்கள் இறந்துவிட்டதாகவே கருதப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பணஉதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு மரணச்சான்றிதழ்களை வழங்கும் பணிகளை துரிதப்படுத்துவதன்மூலம் இழப்பீடு வழங்கும் வேலைகளை வேகமாக முன்னெடுக்க முடியும் என்று உத்தாராகண்ட் முதல்வர் விஜய் பாஹுகுணா தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் ரூபா படி அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.
முன்னதாக, 600 பேர் வரையிலேயே இந்த இயற்கை அழிவில் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
ஹிமாலய மலையை ஒட்டியிருந்த 4,000க்கும் அதிகமான கிராமங்களைப் பாதித்த மழைவௌ்ளத்திலும் மண்சரிவுகளிலும் சிக்கியிருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மீட்புப் பணியாளர்களால் காப்பாற்றப்பட்டனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக எத்தனை என்பது இன்னும் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. -BBC