கச்சத்தீவை மீட்க கோரி கருணாநிதி மனு: சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

karunanidhiபுதுடில்லி : “கடந்த, 1974ம் ஆண்டில், இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டு, அதை தமிழகத்தின் ஒரு பகுதியாக்க வேண்டும்’ எனக் கோரி, தி.மு.க., தலைவர் கருணாநிதி தாக்கல் செய்த மனுவை, விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக, மத்திய அரசுக்கு “நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே, 10 மைல் தொலைவில் உள்ளது, கச்சத்தீவு. ஆட்கள் வசிக்காத இந்தத் தீவு, 285.20 ஏக்கர் பரப்பளவையும், ஒரு மைல், 300 அடி அகலத்தையும் கொண்டது. அங்கு நிரந்தரமாக மக்கள் யாரும் வசிப்பதில்லை என்பதால், எந்த விதமான பொருளாதார வளங்களும் கிடையாது.

அதேநேரத்தில், கச்சத்தீவை சுற்றிஉள்ள கடல்சார் பகுதி, கடல்சார் உயிரினங்களுக்கு வளமான பகுதி. குறிப்பாக, இறால்கள் உட்பட, பல வகையான உயர்ரக மீன்கள், இப்பகுதியில் அதிகம் கிடைக்கும். அதனால், இந்திய மீனவர்களுக்கு, மிகவும் பிடித்தமான மீன்பிடி பகுதியாக, இது உள்ளது.

உரிமை வேண்டும்இந்தக் கச்சத்தீவு, 1974 ஜூன், 26 மற்றும் 28ம் தேதிகளிலும், 1976 மார்ச், 23ம் தேதியும், இந்தியா – இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படி, இலங்கை அரசிடம் வழங்கப்பட்டது.அது முதல், இந்திய மீனவர்கள், இந்தத் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில், மீன்பிடிக்க முடியாத நிலை நிலவுகிறது. இலங்கை கடற்படையினரால், அடிக்கடி தாக்கப்படுவதும் தொடர்கிறது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கச்சத்தீவை, இலங்கையிடம் ஒப்படைப்பது தொடர்பாக, இந்தியா – இலங்கை இடையே, 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தம் செல்லாது என்றும், அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்றும் அறிவிக்க வேண்டும்.

அந்தத் தீவை மீட்டு, தமிழகத்தின் ஒரு பகுதியாகவும், ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒரு பகுதியாகவும் ஆக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். கச்சத் தீவை சுற்றியுள்ள பகுதிகளில், வரலாறு காலம் முதல், தமிழக மீனவர்களுக்கு இருந்து வந்த மீன்பிடி உரிமை மீண்டும் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

அத்துடன், அந்தத் தீவில், தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்துவது, அங்குள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் வழிபாடு நடத்துவது, தீவில் ஓய்வெடுப்பது போன்ற உரிமைகளும், மீண்டும் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

இலங்கை கடற்படை மற்றும் அந்நாட்டு ராணுவத்தினரால் தாக்கப்பட்டு, உயிரையும், உடைமைகளையும் இழக்கும் தமிழக மீனவர்களுக்கு, இழப்பீடு வழங்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க போடப்பட்ட ஒப்பந்தம், அரசியல் சட்டத்தின், 368வது பிரிவுக்கு விரோதமானது. அரசியல் சட்ட விதிகளை கருத்தில் கொள்ளாமலும், நம் நாட்டின் கூட்டாட்சி நடைமுறைகளை புறக்கணித்தும், இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

எனவே, கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்த போடப்பட்ட ஒப்பந்தம், செல்லாது என்றும், அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்றும் அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மனுவை, நேற்று விசாரணைக்கு ஏற்ற, தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர் தலைமையிலான, சுப்ரீம் கோர்ட், “பெஞ்ச்’, மத்திய அரசுக்கு “நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிட்டது.Click Here

TAGS: